கிழக்கில் தொற்று 223: கொரோனா எகிறுகிறது:நிலைமைகவலைக்கிடம்!

கிழக்கு மாகாணத்தில் கொரோனாத்தொற்றுகளின் எண்ணிக்கை 223ஆக அதிகரித்துள்ளது. நாளுக்குநாள் அதிகரித்துச்செல்லும் கொரோனாவினால் கிழக்கின் நிலைமை மோசமாகிக்கொண்டுவருகிறது.
 
கிழக்கில் தொற்றுக்குள்ளான 223பேரும் 5சிகிச்சைநிலையங்களில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
கடந்த மார்ச் மாதத்திலிருந்து 223பேர் கிழக்கில் கொரோனாத் தொற்றுக்கிலக்காகியுள்ளதாக கிழக்கு சுகாதாரத்திணைக்கள தகவல் மையம் தெரிவிக்கின்றது.
 
இவர்களில் பேலியகொட கொத்தணி மூலமாக இதுவரை 200 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். மினுவாங்கொட கொத்தணி மூலமாக 04பேரும் உள்ளிட்ட ஏனைய இடங்கள் மூலமாக 23பேரும் தொற்றுக்கிலக்காகியிருந்தனர்.
 
இதுவரை கிழக்கில் பேலியகொட கொத்தணி மூலாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 88பேரும் கல்முனை பிராந்தியத்தில் 86பேரும் திருமலை மாவட்டத்தில் 16பேரும் அம்பாறை பிராந்தியத்தில் 10பேரும் தொற்றுக்கிலக்காகியுள்ளனர்.
 
அக்கரைப்பற்றில் 59 பேரும் வாழைச்சேனை கோறளைப்பற்று மத்திபிரிவில் 60   பேரும் இனங்காணப்பட்டிருந்தனர். அடுத்தபடியாக   இறக்காமத்தில் 11பேரும் ஏறாவூரில் 10பேரும்  இனங்காணப்பட்டிருந்தனர்.
 
அம்பாறை மகாஓயா தெஹியத்தகண்டிய மற்றும் கந்தளாய்ப்பிரிவில் இனங்காணப்பட்ட கொரோனாத் தொற்றாளர் நால்வரும் மினுவாங்கொட கொத்தணிமூலம் தொற்றுக்குள்ளானவர்கள். ஏனைய 187பேரும் பேலியகொட மீன்சந்தைகொத்தணியில் பாதிக்கப்பட்டவர்களாவர்.
 
கிழக்கிலுள்ள ஜந்து கொரோனா சிகிச்சை நிலையங்களில் தற்போது 449கொரோனாத் தொற்றாளர்கள்; சிகிச்சை பெற்றுவருகின்றனர். நேற்று(30.11.2020) வரை 1214பேர் மேற்படி 5 வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு அவர்களில் 760பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.5பேர் இடமாற்றப்பட்டுள்ளனர்.இன்னும் 14கட்டில்களே எஞ்சியுள்ளன.
 
காத்தான்குடி சிகிச்சை நிலையத்தில் நேற்றுவரை 463பேர் அனுமதிக்கப்பட்டு 314பேர் குணமடைந்து வெளியேறியதால் தற்போது 146பேர் தங்கியிருந்து சிகிச்சைபெற்று வருகின்றனர். மூவர் இடமாற்றப்பட்டிருந்தனர்.
 
மேலும் ஈச்சிலம்பற்று சிகிச்சை நிலையத்தில் 56  பேரும் கரடியனாறு சிகிச்சை நிலையத்தில் 101 பேரும் பதியத்தலாவ சிகிச்சை  நிலையத்தில்  67பேரும் பாலமுனை சிகிச்சை நிலையத்தில் 79 பேரும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதுவரை கிழக்கில்  சந்தேகத்திற்கிடமான 12122பேரில்    445பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

Related posts