கொரோனா தொற்று எனச் சந்தேகிக்கப்படும் எவரும் மட். போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு வரப்படமாட்டார்கள்

கொரோனா தொற்று எனச் சந்தேகிக்கப்படும் எவரும் மட். போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு வரப்படமாட்டார்கள் என வைத்தியசாலைப் பணிப்பாளர் பொதுமக்கள் முன் உறுதியளிப்பு…
 
மட்டக்களப்பு புணானை பல்கலைக்கழகத்தில் இத்தாலி, ஈரான், கொரிய போன்ற நாடுகளில் இருந்து வரும் பயணிகளை 14 நாட்கள் தடுத்து வைத்து பரிசோதனைக்குட்படுத்தி அவர்களுக்கு ஏதும் தொற்றுக்கள் தொடர்பான அறிகுறிள் இருப்பின் அவர்களுக்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையினூடாக சிகிச்சை மேற்கொள்வது என்று வெளியாகிய தகவலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக இன்றைய தினம் மட்டக்களப்பு நகர் இளைஞர்களால் பொது அமைப்புகள், பொதுமக்களின் ஒத்துழைப்புடன் பாரிய ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.
 
மட்டக்களப்பு ஆனைப்பந்தி ஆலயத்தில் இருந்து ஆர்ப்பாட்டம் பேரணியாக ஆரம்பிக்கப்பட்டு போதனா வைத்தியசாலை வரை சென்று வைத்தியசாலை முன்றலில் ஆர்ப்பாட்டம் தொடர்ந்தது.
 
மேற்குறிப்பிட்ட விடயம் தொடர்பில் வைத்தியசாலைப் பணிப்பாளர் உரிய விளக்கத்தினைத் தருவதுடன், இவ்விடயம் இங்கு மேற்கொள்ளமல் இருப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்களால் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பில் வைத்தியசாலைப் பணிப்பாளர் ஆர்ப்பாட்ட இடத்திற்கு வருகை தந்து பொது மக்கள் முன் தமது கருத்தினை வெளிப்படுத்த வேண்டும் எனவும் கோரப்பட்டது.
 
இவ்வார்ப்பட்டத்தில் இளைஞர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியற் பிரமுகர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், மாநகர முதல்வர் தி.சரவணபன் மற்றும் பொதுமக்கள், குறிப்பாகப் புளியந்தீவுப் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
 
சுமார் இரண்டரை மணித்தியாலங்களுக்கு மேல் தொடர்ந்த ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் ஆர்ப்பாட்ட ஏற்பாட்டுப் பிரதிநிதிகளுடன் வருகை தந்த வைத்தியசாலைப் பணிப்பாளர் திருமதி க.கலாரஞ்சனி அவர்கள் இது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநருடன் கலந்துரையாடியதற்கமைவாக புணாணைப் பல்கலைக்கழகத்தில் தடுத்து வைக்கப்படுவோர் எவரும் எந்த சிகிச்சைகளுக்காகவும் மட்டக்களப்பு பேதனா வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்படமாட்டார்கள் எனவும், அவர்கள் சிகிச்சைக்காக கொழும்புக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக உறுதியளித்தார். இந்த உறுதியளிப்பின் பின்னர் ஆர்ப்பாட்டம் நிறைவுக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts