கொல்லப்பட்டது கீசகன் என்றால் கொன்றது வீமன்தான் என்கிறமுன்முடிவோடு புலனாய்வு பிரிவினர் செயற்பட்டு இருக்கிறனர்- அப்பாவி தமிழ் இளையோர்களை விடுவிக்க வலியுறுத்து


வவுணதீவில் கடமையில் ஈடுபட்டு இருந்தபோது 05 மாதங்களுக்கு முன்னர் இரு பொலிஸார் சுட்டும், வெட்டியும் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சூத்திரதாரிகள், தாக்குதல்தாரிகள் ஆகியோர் குறித்த விடயங்கள் வெளியில் தெளிவாக தெரிய வந்துள்ள நிலையில் இப்படுகொலைகள் தொடர்பில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்து வைக்கப்பட்டு இருக்கின்ற அப்பாவி தமிழ் இளையோர்களை அரசாங்கம் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் காரைதீவு பிரதேச அமைப்பாளரும், காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் பிரதி தவிசாளருமான வீரகத்தி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
இவரின் காரைதீவு இல்லத்தில் நேற்று திங்கட்கிழமை காலை ஊடகவியலாளர்களை சந்தித்து இது தொடர்பாக பேசியபோது இவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-
வவுணதீவு சம்பவத்தின் உண்மையான குற்றவாளிகளை அப்போதே கண்டு பிடித்து இருந்தால் இப்போது இலங்கை தீவு இவ்வாறான மனித பேரவலத்துக்குள் சிக்கி இருக்காது என்பது திண்ணம் ஆகும். கொல்லப்பட்டது கீசகனாக இருந்தால் கொன்றது வீமனாகத்தான் இருக்க முடியும் என்கிற முன்முடிவோடு புலனாய்வு பிரிவினர் செயற்பட்டதாலேயே உண்மையான குற்றவாளிகளை அப்போது கண்டு பிடிக்க முடியாமல் போனது.இதனால் குற்றவாளிகள் என்கிற வீண் பழியுடன் அப்பாவி தமிழ் இளையோர்கள் ஒரு தொகையினர் சிறைப்பட்டு கிடக்கின்றனர். இவர்களின் குடும்பங்கள் அநாவசியமான துன்பங்களை சுமக்கின்றார்கள். ஆயிரம் குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட கூடாது என்கிற கோட்பாடு இங்கு பொய்ப்பிக்கப்பட்டு இருக்கின்றது. காலம் கடந்து கிடைக்கின்ற நீதிகூட அநீதியே ஆகும். ஆயினும் காலங்கள் கடந்த நிலையிலாவது அப்பாவி தமிழ் இளையோர்களுக்கு இனியாவது நீதி கிடைக்க வேண்டும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்விடயத்தில் உடனடியாக தலையிட்டு அவர்களை விடுதலை செய்தல் வேண்டும். இவர்கள் விடுதலை செய்யப்படுகின்ற வரை நாம் அழுத்தங்களை உரிய தரப்பினர்களுக்கு கொடுத்து கொண்டே இருப்போம்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த யோசப் பரராஜசிங்கம் 2005 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் திகதி மட்டக்களப்பு தேவாலயத்தில் நத்தார் நள்ளிரவு திருப்பலி பூசையின்போது துப்பாக்கிதாரிகளால் சுட்டு கொல்லப்பட்டார். இப்படுகொலை தொடர்பில் புதிய கோணங்களில் புலனாய்வு பிரிவினர் விசாரிக்க வேண்டிய தேவையை காலம் கொடுத்து உள்ளது என்றும் நாம் விசுவாசிக்கின்றோம்.

Related posts