கொழும்பு குப்பைக்கு எதிராக வைத்தியர்களும் கவனயீர்ப்பு போராட்டம்

கொழும்பு குப்பைகளை புத்தளத்தில் கொட்டும் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, புத்தளம் வைத்தியர்கள் மற்றும் மருத்துவ பீட மாணவர்கள் புத்தளம் கொழும்பு முகத்திடலில் கவனயீர்ப்பு நடவடிக்கையில்  ஈடுபட்டனர்.

கொழும்பு குப்பைகளை புத்தளத்தில் கொட்டும் அரசாங்கத்தின் திட்டங்களை உடனடியாக கைவிடுமாறு கோரி புத்தளத்தில் 37ஆவது நாளாக சுழற்சி முறையிலான சத்தியாக்கிரக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையிலேயே வைத்தியர்களும் மருத்துவபீட மாணவர்களும் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

ஏற்கனவே, சீமெந்து தொழிற்சாலை, அனல் மின்சாரம் என்பவற்றால் புத்தளம் மக்கள் தொடர்ந்தும் பாதிப்புக்களை இன்றும் எதிர்நோக்கி வருகின்றனர்.

எனவே, புத்தளத்தில் வாழும் மூவின மக்களும் இத்திட்டத்துக்கு எதிராக இன, மத, பிரதேச பேதங்களுக்கு அப்பால் போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில், நாங்கள் மாத்திரம் ஒதுங்கியிருக்க முடியாது. பொறுப்பான தொழில்துறையினர் என்ற அடிப்படையில் நாங்களும் இத்திட்டத்தை கடுமையாக எதிர்க்கிறோம் என போராட்டத்தில் ஈடுபட்ட வைத்தியர்கள் தெரிவித்தனர்.

புத்தளத்தை மிக அண்மித்த பகுதியில் திண்மக் கழிவு முகாமைத்துவ திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமானால் புத்தளத்தில் வாழும் மக்களுக்கு சமகாலத்திலும், எதிர்காலங்களிலும் சுகாதாரம், தொழில்துறை, இயற்கை வளம் என முழு வாழ்க்கைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் உடனடியாக இந்த திட்டம் தொடர்பில் அரசாங்கம் மீள்பரிசோதனை செய்ய வேண்டும்.

எமது இந்த எதிர்ப்பு போராட்டமானது ஒரு கட்சிக்கோ அல்லது அரசாங்கத்திற்கோ எதிரான போராட்டம் கிடையாது. எமது சந்ததியினரையும், இயற்கை வளங்களையும் பாதுகாப்பதற்கான போராட்டமாகும்.

எனவே, இந்த போராட்டத்திற்கு ஒரு முடிவு கிடைக்கும் வரை, புத்தளம் மக்களோடு இணைந்து வைத்தியர்கள் என்ற அடிப்படையில் நாங்களும் எமது பங்களிப்பை வழங்குவோம் என உறுதியாக ௯றிக்கொள்கிறோம் எனவும் கலந்துகொண்ட வைத்தியர்கள் தெரிவித்தனர்.

 

Related posts