தமிழில் தேசியகீதத்திற்கு பதிலாக ஜனாதிபதியின் உரை தமிழ் மொழிபெயர்ப்பை ஒப்பிட்டுக் காட்டுவதுபூச்சாண்டி காட்டும் செயலாகும்…

தமிழ்த் தேசிய கீதத்திற்கு ஜனாதிபதியின் பேச்சின் தமிழ் உரைப்பெயர்ப்பு எவ்விதத்திலும் ஈடாகாது. அவ்வாறு காட்ட முயல்வது, செய்யப்பட்ட ஒரு மகாபிழையை மறைப்பதற்குக் காட்டப்படுகின்ற பூச்சாண்டியே ஆகும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான கி.துரைராசசிங்கம் தெரிவித்தார். 
 
தமிழில் தேசிய கீதம் பாடுவதை விட ஜனாதிபதியின் உரை தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது சிறப்பான விடயம் என பிரதமர் செயலகம் விடுத்துள்ள அறிக்கை தொடர்பில் இன்றைய தினம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
1956ல் ஐக்கிய தேசியக் கட்சியின் களனி மகாநாட்டில் சிங்களத்தை மட்டும் அரச கரும மொழி ஆக்குவதான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த தமிழ்ப் பிரதிநிதிகள் எல்லாம் கட்சியை விட்டு விலகியதைப் போன்று தற்போது அரசோடு சேர்ந்திருக்கின்ற மற்றும் ஆதரவு வழங்குகின்ற தமிழ்க் கட்சிகளும், தமிழ் உறுப்பினர்களும் செய்வார்களா? என்றும் இதன்போது அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
 
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
நேற்று நடந்து முடிந்த தேசிய சுதந்திர தின விழாவிலே ஜனாதிபதியின் உரை தமிழில் வாசிக்கப்பட்டது. இதற்காக எட்டு நிமிடம் செலவிடப்பட்டது. இச் செயற்பாடு தமிழில் தேசிய கீதம் பாடுவதை விட சிறப்பானது என்ற வகையில் பிரதமரின் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது. 
 
தமிழ்த் தேசிய கீதத்திற்கு ஜனாதிபதியின் பேச்சின் தமிழ் உரைப்பெயர்ப்பு எவ்விதத்திலும் ஈடாகாது. அவ்வாறு காட்ட முயல்வது செய்யப்பட்ட ஒரு மகா பிழையை மறைப்பதற்குக் காட்டப்படுகின்ற பூச்சாண்டியே ஆகும். உரைப்பெயர்ப்பு வாசிக்கப்பட்ட எட்டு நிமிடத்தையும் தமிழ் மொழி தெரியாதவர்கள் சகித்துக் கொண்டார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளமையும், மூன்று நிமிட நேர சிங்களத் தேசிய கீதத்தை சிங்களம் தெரியாதவர்கள் சகித்துக் கொண்டு கேட்டார்கள் என்று சொல்வதும் பொருத்தமாயிருக்குமா? இன்னொரு வகையில் சிங்களத்தில தேசிய கீதம் பாடப்படுவதை தமிழ் பேசும் மக்கள் நல்லிணக்கத்தைக் கருத்திற்கொண்டு சகித்துக் கொள்ள வேண்டும் என்பதும், அதே நேரத்தில் தமிழில் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்ற தமது உரிமையை முற்றுமுழுதாக விட்டுக் கொடுக்க வேண்டும் என்றும் சொல்வதாகவே இவ்வறிக்கை அமைகின்றது. எவ்விதத்தில் பார்ப்பினும் பிரதமர் செயலகத்தின் இந்த அறிக்கை ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. 
 
ஜனாதிபதி அவர்கள் தான் எல்லா மக்களுக்கும் ஜனாதிபதி என்பதை தனியாகப் பிரகடனப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. அவ்வாறு கூறுவது ஜனாதிபதியின் பெருந்தன்மை என்று சொல்ல விழைவது ஜனநாயகத்தின் அடிப்படையையே தகர்க்கும் ஒரு விடயமாகும். பொதுவான ஒரு பதவிக்குப் பலர் போட்டியிடுவதும், தெரிவான ஒருவர் எல்லோருக்கும் பொதுவாக பணியாற்றுவதும் என்பது இயல்பானதும், அவ்விதம் இருக்க வேண்டியதுமே ஆகும். எவ்விதத்தில் பார்க்கினும் பல்வேறு தரப்பினருடைய வேண்டுகோளும் உதாசீனப்படுத்தப்பட்டுள்ளது என்பதோடு, தமிழ் மக்களின் உரிமை பகிரங்கமாக மறுக்கப்பட்டுள்ளது என்பதே உண்மையாகும். இவ்வாறு செய்வதன் மூலம் இந்த நாட்டு பெரும்பான்மை மக்கள், அதுவும் ஜனாதிபதி அவர்களுக்கு வாக்களித்த மக்கள் மகிழ்ச்சியடைகின்றார்கள் என்ற செய்தியை இந்த அரசாங்கம் வழங்க முற்படுமென்றால் அது அந்த மக்களின் மனங்களிலே நல்லிணக்கத்துக்கு மாறான ஒரு குரோத சிந்தனையையே ஏற்படுத்துவதாய் அமையும். 
 
இந்த நாட்டின் சகல மக்களையும் சமமாக மதிப்பதாகக் கூறப்படும் வார்த்தைக்கு எவ்வித பொருளும் இல்லை என்பதையே இந்த நிகழ்வு எடுத்துக் காட்டுகின்றது. வெற்று வாசகங்களின் மூலம் சம உரிமையையும், சமாதானத்தையும் ஏற்படுத்திவிட முடியாது. 
 
அந்நியர்கள் இந்தத் தீவை கைப்பற்றி ஆட்சி செய்வதற்கு முன்பு இறைமையோடு வாழ்ந்த தமிழ் பேசும் மக்கள் குறிப்பாகத் தமிழ் மக்கள் காலமாற்றத்திற்கு ஏற்ற விதத்திலே ஒற்றுமையாக வாழ விரும்புவதென்பது தமது இறைமையை பெரும்பான்மையினருக்கு அடகுவைக்கும் ஒரு ஒப்புதலாக எவ்விதத்திலும் அமைந்துவிடாது. தற்கால உலக அரசியல் வளர்ச்சிக்கு எற்ற விதத்திலே இலங்கையின் தமிழ் பேசும் மக்களது இறைமையை மதிக்கும் வகையிலே இந்த அரசு தனது செயற்பாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும். 
 
தமிழ் மக்கள் தங்களுடைய உரிமையை எவ்வாறு பாவிக்க வேண்டும் என்பதனை சிங்களப் பெரும்பான்மை மக்களும், அவர்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளும் தீர்மானிக்கலாம் என்ற வகையிலான விடையாகவே பிரதமரின் அலுவலகத்தின் இந்த அறிக்கை அமைகின்றது. எவ்வாறு இருப்பினும் கடந்த நான்கு வருடமாக நிலவிய நல்லிணக்கத்தை இந்த அரசு காலிலிட்டு மிதித்துவிட்டது என்பதையே இந்த செயற்பாடு எடுத்துக் காட்டுகின்றது. 
 
இந்த வேளையிலே 1956ல் ஐக்கிய தேசியக் கட்சியின் களனி மகாநாட்டில் சிங்களத்தை மட்டும் அரச கரும மொழி ஆக்குவதான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த தமிழ்ப் பிரதிநிதிகள் எல்லோரும் கட்சியை விட்டு விலகியதற்கு ஒத்த செயற்பாட்டை தற்போது அரசோடு சேர்ந்திருக்கின்ற மற்றும் ஆதரவு வழங்குகின்ற தமிழ்க் கட்சிகளும், தமிழ் உறுப்பினர்களும் செய்வார்கள் என்றால் அரசு இவ்விடயத்தை மறுபரிசீலனை செய்வதற்காகக் கொடுக்கப்படும் ஒரு அழுத்தமாக அமையலாம். இதை அவர்கள் செயவார்கள் என்று நாம் நம்பவில்லை. 
 
எது எவ்வாறு இருப்பினும் வேண்டுமென்றே பிழையான விளக்கங்களின் அடிப்படையில் தமிழ் மக்களின் உரிமைகள் பகிரங்கமாக உதாசீனம் செய்யப்படுவதையே இந்த நிகழ்வு எடுத்துக் காட்டுகின்றது. 
 
பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் ஒற்றையாட்சியின் கீழ் இருந்த இந்தியா பிரித்தானியர் வெளியேறியதைத் தொடர்ந்து மாநிலங்களுக்கு அதிகாரங்களைப் பங்கீடு செய்து ஒரு சமஷ்டிக் கட்டமைப்பை உருவாக்கியதன் காரணமாகவே அது ஒரு பூரண சுதந்திர நாடாக மாறியது. இலங்கையோ பிரித்தானியர் கடைப்பிடித்த அதே ஒற்றையாட்சிக் கட்டமைப்பை வைத்துக் கொண்டு பன்முகத் தன்மை கொண்ட இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்து விட்டது என்றும், இலங்கை மக்கள் அனைவரும் அச்சுதந்திரத்தை அனுபவிக்கின்றார்கள் என்றும் கூறுவது எந்த வகையிலும் பொருத்தமானதல்ல. அதாவது பன்முகத் தன்மை கொண்ட ஒரு நாட்டில் ஒற்றையாட்சி எந்தவகையிலும் எல்லா சமூகங்களுக்கும் சுதந்திரத்தை வழங்குகின்ற ஒரு ஆட்சி முறையாக அமையாது. எனவே ஒற்றையாட்சியின் கீழ் பன்முகத் தன்மை கொண்ட மக்கள் ஒன்றிணைவது என்பது பெரும்பான்மை பலத்தைக் கொண்டு அவர்களை அடக்கியாள்வதாகவே அமையும். ஆதலால், சுதந்திர தின நிகழ்வின் போது ஜனாதிபதி அவர்களால் வெளியிடப்பட்டிருக்கின்ற இக்கருத்தானது பொருத்தமற்ற சமன்பாடு ஒன்றின் மூலம் பிரச்சினையைத் தீர்க்க எடுக்கும் பொருத்தமற்ற ஒரு முயற்சியே ஆகும்.
 
இந்நிலையில், மீணடும் மீண்டும் விலியுறுத்தப்படுகின்ற ஒற்றையாட்சிக் கோட்பாடானது பன்முகத் தன்மை கொண்ட ஒரு அரசியற் சமூகத்திற்கு எவ்விதத்திலும் பொருத்தமானதல்ல என்று அரசை ஏற்றுக் கொள்ள வைக்கும் செயற்பாடுகளை தமிழ் மக்கள் இன்னும் முனைப்பாக வலியுறுத்த வேண்டியதன் ஆரம்பத் தளமாகவே நடந்து முடிந்த சுதந்திர தின நிகழ்வு அமைகின்றது.

Related posts