தமிழ்ப் பாடசாலைகளை ஒன்றிணைத்து கல்முனை தமிழ்க் கல்வி வலயம் உருவாக்குவது காலத்தின் தேவையாகும்.(த.கலையரசன்)

கல்முனை சம்மாந்துறை கல்வி வலயங்களில் இருக்கின்ற தமிழ்ப் பாடசாலைகளை ஒன்றிணைத்து கல்முனை தமிழ்க் கல்வி வலயம் ஒன்றினை உருவாக்குவது இன்றைய நிலையில் காலத்தின்தேவையாக இருக்கின்றது. என முன்னாள் கிழக்குமாகாணசபை உறுப்பினரும் நாவிதன்வெளிப்பிரதேசசபையின் தவிசாளருமான த.கலையரசன் தெரிவித்தார்.

நாவிதன்வெளி 15 ஆம்கிராமம்  உதவும்கரங்கள் சமூகமேம்பாட்டு அமைப்பின் ஏற்பாட்டில் சாதனையாளர்களைப்பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு அவ் அமைப்பின் தலைவர் எஸ்.டிபோசன் தலைமையில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றபோது அந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு பேசுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந் நிகழ்வில் அதிதிகளாக  விவேகானந்தா மகாவித்தியாலய அதிபர் கே.பேரானந்தம் உட்பட பலர் கலந்துகொண்டனர்

அவர் மேலும்பேசுகையில்  இந்தப் பிரதேசம் 2001 ஆம் ஆண்டு தனியான பிரதேசசபையும், பிரதேசசெயலகமாகவும் பிரிக்கப்பட்டது அன்றிலிருந்து நாவிதன்வெளிப்பிரதேசம் கல்வியிலும் அபிவிருத்தியிலும் ஓரளவிற்கு முன்னேற்றம் கண்டுவருகின்றது.

இந்தப்பிரதேசம் கல்லோயாக் குடியேற்றத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டபோது துறைநீலாவணை உட்பட பல பகுதிகளில் இருந்து குடியேற்றப்பட்டனர் அன்றிலிருந்து இங்குவாழுகின்றவர்கள் எல்லைக்காவலர்களாக தமிழ் மக்களின் நிலங்களையும் கலை கலாசாரங்களையும் பாதுகாத்துவருகின்றனர். இவர்களைப் போன்று அனைத்துத் தமிழ்மக்களும் உறுதியாகவும் ஒற்றுமையாகவும் செயற்பட்டால் எமக்கான சுயநிர்ணய உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கு எவ்வித தடைகளும் வந்தாலும் அதனை தகர்த்தெறியமுடியும்.என்பதனை உணர்ந்துசெயற்படவேண்டும்.

இன்று எங்களது தமிழ்ப் பிரதேசங்களில் அதிகமான இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாகி தங்களது வாழ்க்கையையும் எமது கலை கலாசாரத்தினையும் தொலைக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர் இதனை நாம் நிறுத்தவேண்டும் இதற்கு  உதவும் கரங்கள் சமுக மேம்பாட்டு அமைப்புப்போன்ற சமூக மட்ட அமைப்புக்கள் முன்நின்று உழைக்கவேண்டி இருக்கின்றது.

இன்று கல்வியில் சாதனை படைத்த மாணவர்களை இனங்கண்டு அவர்களைக் கௌரவப்படுத்தும் செயற்பாட்டை இந்த அமைப்பு மேற்கொண்டு இருப்பது பாராட்டுக்குரியது ஏனெனில் பாராட்டப்படுகின்ற மாணவர்களைப் பார்க்கின்ற ஏனைய மாணவர்களும் அவர்களைப்போன்று சாதனைபடைக்கவேண்டும் என்ற உறுதிப்பாங்கை பெற்று எதிர்காலத்தில் சாதனைகளை நிலைநாட்டக்கூடிய வாய்ப்புக்கள் ஏற்படும்

நாவிதன்வெளிக்கிராமத்தினைப் பொறுத்தமட்டில் கடந்த காலங்களில் பெரிதும் பாதிக்கப்பட்டு அபிவிருத்திகாணாமல் இருந்தபோது எங்களது அரசியல் பலத்தினாலும் மக்களினது ஆதரவாலும் ஓரளவுக்கு அபிவிருத்திகளை முன்னெடுக்கக் கூடியதாக இருக்கின்றது.

இந்தப்பிரதேசத்தில் கல்விநிலையினை  நோக்கும்போது அதிகமாக கலைத்துறைப் பாடங்களை தெரிவுசெய்து கலைப்பட்டதாரிகளாக வெளிவருகின்றனர.; இதன் காரணமாக இந்தப்பிரதேச வைத்தியசாலைகளில் வைத்தியர்தட்டுப்பாடு மற்றும் பொறியியலாளர்கள் பற்றாக்குறையாக இருக்கின்றனர். எனவே எங்களது மாணவர்கள் விஞ்ஞானத்துறை கணிதத்துறைகளை உயர்தரத்தில் தெரிவுசெய்து எதிர்காலத்தில் வைத்தியர்களாகவும் பொறியியலாளர்களாகவும் தெரிவாகி எமது பிரதேசத்திற்குச் சேவையாற்றவேண்டும் என்றார்.

Related posts