தமிழ் மக்களின் பலம் தமிழ் தலைமைகளின் சுயநல அரசியலால் பலவீனமடைகின்றது –

அடக்குமுறைகளுக்கு உள்ளாகும் தமிழ் மக்களின் பலம், தமிழ் தலைமைகளின் சுயநல அரசியல் மற்றும் குழுவாதபோக்குகளால் மேலும் பலவீனமடைந்துள்ளதாக புனர்வாழ்வளிக்கபட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் கே.இன்பராசா தெரிவித்திருந்தார்.

அத்துடன் தமிழ் தலைமைகள் மக்கள் போராட்டங்களை முன்னெடுக்க முன்வராததால் இன்று மக்களே போராடிவருகிறார்கள் என்றும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.

புனர்வாழ்வளிக்கபட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியின் அரசியல் நிலைப்பாடு தொடர்பாக அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு  நேற்று  (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதன்போதே தெரிவித்திருந்தார்.

அவர்கள் மேலும் குறிப்பிடுகையில், “2009 ஆண்டு முள்ளிவாய்கால் பேரவலாமாக வந்தபின்பும் கூட தமிழ்அரசியல் தலைமைகள் என்று கூறிக்கொள்வோர் மக்கள் போராட்டங்களை முன்னெடுக்கமுன்வரவில்லை. அதனால் இன்று மக்களே போராடிவருகிறார்கள்.

அடக்குமுறைகளுக்கு உள்ளாகும் தமிழ் மக்களின் பலம், தமிழ் தலைமைகளின் சுயநல தேர்தல் அரசியல் மற்றும் குழுவாத போக்குகளால் மேலும் பலவீனமடைந்துள்ளது.

இதனால் தமிழர் அரசியலில் வெறுமை ஏற்பட்டிருப்பதுடன் மக்களை அரசியல் மயப்படுத்தி, அரசியற்போராட்ட சக்தியினை இளையோர் மத்தியில் ஏற்படுத்துவதில் போரிற்கு பின்பாக வடக்கு கிழக்கு தவறியுள்ளமையினைக் காணமுடிகிறது.

இன்றைய சூழலில் ஐனநாயக உரிமைகளை வென்றெடுத்தலுடன், சுயநிர்ணய உரிமையை நிலைநாட்ட அனைவரும் ஓரணியில் ஒன்றுதிரள்வது அவசியம்.

அதிகார சக்திகளிடம் அடிபணிதலுக்கு சாத்தியமே இல்லை என்கின்ற அடிப்படையிலும் எமது அரசியல் நிலைப்பாட்டில் எந்தவித சமரசமும் மாற்று அமைப்புடன் வைத்துகொள்வதில்லை என்ற புரிதலுடன் நாம் செயற்பட்டுவருகின்றோம்.

எமது மக்களின் வலிகளை நாம் உணர்ந்ததன் வெளிப்பாடே எம்மை ஆயுதம் ஏந்தவைத்தது. எமது மக்களிற்கான அரசியல் நெருக்கடிகள் யாவும் தொடர்ந்த வண்ணமே இருக்கிறது.

நாம் நம்பிய அரசியல் சக்திகள் அனைத்தும் எமது மக்களை ஏமாற்றி அந்த மக்களின் அவலமான வாழ்க்கையை தொடரவைத்ததுடன் தமது அரசியல் சுகபோகங்களைத் தொடர்வதையே தமது சிறந்த தந்திரோபாயமாகவும் , குறிக்கோளாகவும் தொடர்ந்துகோண்டு வருகின்றார்கள்.

அந்த அடிப்படையிலேயே எமது கட்சி சரியான அரசியல் தெளிவு நிலையை இளையோர் மத்தியில் ஏற்படுத்த அனைத்து தரப்பினரையும் உள்வாங்கி செயற்படும் வகையில் உருவாக்கபட்டுள்ளது” என்று தெரிவித்தனர்.

 

 

Related posts