தமிழ் மக்களுக்கு உரிமையினையும்,தீர்வினையும், அபிவிருத்தியையும் பெற்றுக்கொடுக்கமுடியாத தமிழ்தலைமைகள்

தமிழ் மக்களுக்கு உரிமையினையும்,தீர்வினையும், அபிவிருத்தியையும் பெற்றுக்கொடுக்கமுடியாத தமிழ்தலைமைகள்
இப்போது காலையில் எழுந்தவுடன் வியாழேந்திரன் என்னசெய்கின்றார்,ஆளும்கட்சியை சார்ந்தவர்கள் என்ன செய்கின்றார்கள் என்று ஆராய்வதே இவர்களின் புழைப்பாக இருக்கின்றது இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன்  தெரிவித்தார்.
 

பாடசாலைகள் மாணவர்கள் போல் கை உயர்த்தி கடந்த ஆட்சிக்காலத்தில் அரசாங்கத்தினை பாதுகாத்தவர்களினால் தமிழ் மக்களுக்கு எந்தவொரு வேலைத்திட்டத்தினை செய்யாதவர்களை பார்த்து நாங்கள் ரணிலினதும், மைத்திரியினதும் கால்களை நக்குவதற்கா வாக்களித்தீர்கள் என்று கேட்கபதா என்பதை சிந்திக்கவேண்டும் என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் முன்வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையிலான ஊடகவியலாளர் சந்திப்பொன்றினை இன்று(27) காலை இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் நடாத்தினார்.

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையினை அழைத்து வந்து அவர்களின் சப்பாத்துக்கால்களை நக்குவதற்கா என அந்த ஊடகவியலாளர் சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் கேள்வியெழுப்பியிருந்தார்.
அதற்கு பதிலளிக்கும் வகையிலேயே இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பினை இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் நடாத்தியிருந்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

சமூக,சில ஊடகத்தளங்களில் வெளியான செய்திகளை பார்த்து பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் சில கருத்துகளை கூறியிருந்தார்.அதற்கு பதிலளிக்கவேண்டிய அவசியம் இருக்கின்றது.முகப்புத்தகத்திலும் இணையத்திலும் வந்த செய்திகளைப்பார்த்து ஊடக சந்திப்பினை செய்யாமல் என்னிடம் கேட்டிருந்தால் நான் விளக்கமளித்திருப்பேன்.
கடந்த சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கபில அத்துக்கொரல, இராஜாங்க அமைச்சர் லொகாத் ரத்வத்தை ,பாராளுமன்ற உறுப்பினர் ஜெயதிலக அவர்களும் மட்டக்களப்பு பொதுஜன பெரமுன அலுவலகத்திற்கு வருகைதந்திருந்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒவ்வொரு கிராமத்திற்கும் 30இலட்சம் ரூபா நிதியொதுக்கப்படுகின்றது.வரவிருக்கின்ற வரவு செலவுத்திட்ட விடயத்தினை கட்சி சார்ந்தவர்களுடனும் கலந்துரையாடி கிராம மட்டத்துடன் கலந்துரையாடுவதற்காகவும் அவர்கள் வருகைதந்திருந்தனர்.அவர்கள் வருகை தந்த பின்னர் நானும் இந்த மாவட்டத்தின் இராஜாங்க அமைச்சர் என்ற அடிப்படையில் அந்த கூட்டத்தில் கலந்துகொண்டேன்.
நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் கொழும்பு தலைமையகத்தினால் தீர்மானிக்கப்பட்டு அமைச்சர்கள்,இராஜாங்க அமைச்சர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள் அனுப்பிவைக்கப்படுகின்றனர்.அந்த அடிப்படையிலேயே அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வந்தார்கள்.
இந்த நிலையில் ஒரு சில குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. வியாழேந்திரன்,சந்திரகுமார் ஆகியோரின் அழைப்பின் பேரிலேயே இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகைதந்தார்.வந்தவர் வியாழேந்திரன்,சந்திரகுமாருடன் சந்திப்பினை நடாத்தி விட்டுசென்றார்,வியாழேந்திரன் லொஹான் ரத்வத்தைக்கு செங்கம்பல வரவேற்பளித்தார் போன்ற குற்றச்சாட்டுகளை முகப்புத்தகங்கள் ஊடாகவும் இணையத்தளங்கள் ஊடாகவும் கோவிந்தன் கருணாகரம் அவர்கள் முன்வைத்திருந்தார்.
இந்தவேளையில் நான் ஒரு பகிரங்க சவாலை விடுக்கின்றேன்.லொகான் ரத்வத்தை உட்பட ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களை நானோ சந்திரகுமாரோ தனிப்பட்ட ரீதியாக அழைத்து கூட்டம் நடாத்தவில்லை.தலைமைப்பீடத்தினால் தீர்மானப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டனர்.அவர்களை நாங்கள் அழைக்கவில்லை.லொஹான் ரத்வத்தைக்கு நான் செங்கம்பல வரவேற்பை வழங்கவில்லை.அவர் என்னுடனோ சந்திரகுமாருடனோ தனிப்பட்ட ரீதியில் கலந்துரையாடவில்லை.கூட்டம் ஆரம்பித்து இறுதிநேரத்திலேயே நான் அதில் கலந்துகொண்டேன்.
தனிப்பட்ட ரீதியாக நானோ,சந்திரகுமாரோ லொகான் ரத்வத்தையினை மட்டக்களப்புக்கு அழைத்து வந்ததை நிரூபித்து காட்டவேண்டும்.செங்கம்பலம் விரித்தார்களா என்பதை நிரூபிக்கவேண்டும்.என்னோடும்,சந்திரகுமாரோடும் தனிப்பட்ட கலந்துரையாடலை மேற்கொண்டார்களா என்பதை நிரூபிக்கவேண்டும்.அவ்வாறு நிரூபித்தால் 24மணி நேரத்திற்குள் நான் எனது அரசியல் வாழ்விலிருந்து ஒதுங்குவேன்.அவ்வாறு நிரூபிக்காவிட்டால் இந்த குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் அரசியல்வாதிகளினால் அரசியலில் இருந்து ஒதுங்க முடியுமா என்று சவால்விடுகின்றேன்.
மட்டக்களப்பு மக்கள் மீது தங்களது வங்குரோத்து அரசியலை செய்வதற்காக,தங்களது கட்சிசார்ந்த அரசியலை முன்னெடுப்பதற்காக பிழையான கருத்துகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்லமுடியாது.கடந்த காலத்தில் ஊடகங்களுக்கு எதிராகவும் ஊடகவியலாளர்களுக்கு எதிராகவும் தாக்குதல் நடாத்தப்பட்டபோது அதற்கு எதிராக போராட்டங்களை நடாத்தியவர்கள் நாங்கள்.அவ்வாறான நிலையில் அன்றைய கூட்டம் நிறைவடைந்தபோது நான் கூட்டம் முடிந்ததும் கீழேவந்து அது தொடர்பில் தெளிவுபடுத்தியபோதும் அது தொடர்பில் எந்த இணையமும் பிரசுரிக்கவில்லை.ஆனால் உண்மைக்கு புறம்பான செய்திகளை சில ஊடகங்கள் பிரசுரித்துள்ளது.பொறுப்புவாய்ந்த ஊடகங்கள் இவ்வாறு பொறுப்பற்ற வகையில் செய்திகளை மக்கள் மத்தியில் கொண்டுசெல்வது மிகப்பிழையான விடயம்.
இவ்வாறான செய்திகளை தமிழரசுக்கட்சி சார்ந்தவர்கள் முகப்புத்தகங்களில் பகிர்வு செய்து தங்களை காட்போட் வீரர்களாக காட்டமுனைகின்றனர்.

பொறுப்பு வாய்ந்த நிலையிலுள்ள ஊடகங்கள் தங்களது பணியை மக்கள் மத்தியில் ஊடக தர்மத்திற்கு கட்டுப்பட்டதாக கொண்டு செல்லவேண்டும்.செங்கம்பல வரவேற்பு அளிக்கப்பட்டதாக வெளியான பொய் செய்திக்கு மாற்று அறிக்கை வராவிட்டால் நீதிமன்றம் ஊடாக நடவடிக்கையெடுக்கப்படும்.மட்டக்களப்பு மாவட்டத்தில் எங்களை வாக்களித்த மக்களுக்கு எங்களால் முடிந்த வேலைத்திட்டங்களை செய்து கொண்டிருக்கின்றோம்.

மட்டக்களப்பில் புதிய வகையான அரசியல் உள்ளது.நான்கு பேருக்கு நல்லது செய்து பிரபலியமாவது கஸ்டம்.யாராவது மக்கள் மத்தியில் செல்வாக்குடன் இருந்தால் அவர்கள் தொடர்பில் விமர்சிப்பது.நாங்கள் தினமும் மக்கள் பிரச்சினை தொடர்பிலேயே சிந்திக்கின்றோம்.அரசியல் கைதிகளை எவ்வாறு விடுவிக்கலாம்,காணிகளை எவ்வாறு விடுவிக்கலாம் என்ற விடயங்களையே நாங்கள் சிந்திக்கின்றோம்.
இவர்களினால் தமிழ் மக்களுக்கு உரிமையினையும் பெற்றுக்கொடுக்கமுடியாது,தீர்வினையும் பெற்றுக்கொடுக்கமுடியாது, அபிவிருத்தியையும் பெற்றுக்கொடுக்கமுடியாது.
இவர்கள் காலையில் எழுந்தவுடன் வியாழேந்திரன் என்னசெய்கின்றார்,ஆளும்கட்சியை சார்ந்தவர்கள் என்ன செய்கின்றார்கள் என்று ஆராய்வதே இவர்களின் புழைப்பாக இருக்கின்றது எனத்தெரிவித்தார்.

Related posts