நவீன வசதிகளுடன் கூடிய ஆணைமடு தொழில்நுட்பக் கல்லூரி கௌரவ பிரதமரினால் திறந்துவைப்பு!

ரூபாய் 420 மில்லியன் செலவில் நவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்ட ஆணைமடு தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் புதிய கட்டிடத் தொகுதி என்பன கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் இன்று (2021.02.11) பிற்பகல் மாணவர்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
 
வளமான நாட்டைக் கட்டியெழுப்பும் வகையில் தொழில்நுட்ப கல்வி மற்றும் தொழிற்பயிற்சி மூலம் திறமையான பணியாளர்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு, திறன்கள் அபிவிருத்தி, தொழில்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சின் வழிகாட்டல் மற்றும் தலையீட்டின் கீழ் ஆணைமடு புறநகர் பகுதியில் இப்புதிய தொழில்நுட்ப கல்லூரி நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
 
1993 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த தொழில்நுட்பக் கல்லூரியின் கற்கைநெறிகள் 1996ஆம் ஆண்டு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தொழில் மற்றும் தொழில் பயிற்சி அமைச்சராக இருந்தபோதே ஆரம்பிக்கப்பட்டது.
 
நகருக்கு வெளியே அதன் இருப்பிடம் அமைந்துள்ளமை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் மட்டுப்படுத்தப்பட்ட இடவசதி காரணமாக இது முழு அரசாங்க நிதியுதவியுடன் ஒரு புதிய தளத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
 
நவீன கட்டிடத் தொகுதியை நிர்மாணிப்பதன் மூலம், புத்தளம் மாவட்ட இளைஞர்களுக்கு பல தொழில்நுட்ப கற்கைநெறிகளை கற்பதற்கு வாய்ப்பளிக்கப்படுவதுடன் ஆண்டுதோறும் சுமார் 600 மாணவர்களுக்கு தொழில்நுட்பக் கல்வியைப் பெறுவதற்கான வாய்ப்பும் கிடைக்கும்.
 
தொடர்ந்து அங்கு உரையாற்றிய கௌரவ பிரதமரின் முழுமையான உரை வருமாறு,
 
தொழில்நுட்பக் கல்லூரிகள் நேற்று தொடங்கியவை அல்ல என்பது எங்களுக்குத் தெரியும். இந்நாட்டில் தொழில்நுட்ப கல்லூரிகள் நீண்ட காலமாக உள்ளன.
 
தொழில் பயிற்சி அதிகாரசபை சமீபத்திய வரலாற்றில் நிறுவப்பட்டது. எமது யுகத்திலேயே அது நிறுவப்பட்டது. ஏனென்றால் சிலர் தொழில்நுட்பக் கல்லூரிக்குச் செல்ல அஞ்சினார்கள். இப்போது எமது பெலியத்தவிலும் தொழில்நுட்பக் கல்லூரி உள்ளது. ஆரம்பத்தில் எவரும் பெலியத்த தொழில்நுட்பக் கல்லூரிக்குச் செல்லவில்லை. மாத்தறை தொழில்நுட்பக் கல்லூரிக்குச் சென்றார்கள்.
 
பெலியத்த தொழில்நுட்பக் கல்லூரியை கடந்துச் சென்று மாத்தறையில் இணைந்தார்கள். ஏனெனில் அந்த இளைஞர்கள் தொழில்நுட்பக் கல்லூரியில் இணைவதில் சற்று பதட்டமாக இருந்தனர்.
 
ஆனால் இன்று தொழில்நுட்பக் கல்லூரிக்கான பாரிய கேள்வி உள்ளது. தொழிற்பயிற்சிக்கான பெரும் தேவை உள்ளது. ஏனெனில் தொழில்நுட்பக் கல்வி கற்றவர்கள் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு செல்லும்போது ஒரு சிறப்பு கிடைக்கும்.
 
ஒரு காலத்தில் பணிப்பெண்களை அனுப்பும் நாடு என்று நம் நாடு அறியப்பட்டது. அந்நிலை இன்று இல்லாது போயுள்ளது. இ நமக்கு இன்று பயிற்சி பெற்ற திறமையான தொழிலாளர்களை அனுப்ப முடிந்துள்ளமை அதற்கு ஒரு காரணமாகும்.
 
திறமையான தொழிலாளர்களை முறையாக அனுப்புவதன் மூலம், அவர்களின் வருமானத்தை மட்டுமல்ல, நம் நாட்டுக்கும் ஒரு பெரிய வருமானத்தையும் சம்பாதிக்க முடிந்தது.
 
தேயிலை, இரப்பர் மற்றும் தேங்காய் விற்பனையின் மூலம் பெற்றதைவிட இன்று நம் இளைஞர் யுவதிகள் வெளிநாட்டிற்கு சென்று அனுப்பும் பணத்தின் மூலம் கிடைக்கும் அந்நிய செலாவணியே அதிகமாகும்.
 
இன்று அனைத்து பிள்ளைகளுக்கும் பல்கலைக்கழகத்திற்கு செல்ல முடியாது. அவ்வாறு அனுப்ப முடிந்தால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைவோம். ஆனால் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்கள் மட்டுமே பல்கலைக்கழகத்திற்கு செல்கிறார்கள்.
 
அதற்கு சமமான கல்வியைப் பெறுவதற்கு தொழில்நுட்பக் கல்லூரிகள் தோன்றியவுடன், பலரும் அதில் இணைந்து கல்வி கற்க ஆரம்பித்தனர். ஆரம்பத்தில் அதிகம் வரவில்லை. ஆனால் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக இளைஞர்கள் தொழில்நுட்பக் கல்லூரிகளில் இணைந்து கல்வி பயின்று வெளியேறி வருகின்றனர்.
 
எனவே, தொழில்நுட்பக் கல்லூரிகளை வலுப்படுத்தி அவற்றை சமுதாயத்திற்கு முன்வைக்க வேண்டும். நம் பிள்ளைகளுக்கு அந்தக் கல்வியை பெற்றுக் கொடுத்து அவர்களுக்கு ஒரு சிறந்த வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். வேலைவாய்ப்பே அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.
 
நான் இந்த ஆசனத்திற்கு வரும்போது எமது நண்பர் டி.எம்.தாசநாயக்கவையே எனக்கு ஞாபகம் வரும். அவர் எப்போதும் இந்த ஆசனத்திற்காக உழைத்த மற்றும் இந்த ஆணைமடு பிரதேசம் குறித்து அதிக கவனம் செலுத்திய ஒரு நாடாளுமன்ற உறுப்பினராவார்.
 
அவர் எல்.ரி.ரீ.ஈ. பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார். புலி பயங்கரவாதிகளால் ஜனாதிபதிகள், அமைச்சர்கள் மற்றும் பலர் கொல்லப்பட்டனர். அந்த சவாலை எதிர்கொள்வதே எமக்கான சவாலாக அமைந்தது.
 
எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் எமக்கு இந்த முதலாவது பணி பயங்கரவாதத்தை நாட்டிலிருந்து இல்லாதொழிப்பதே ஆகும். அதனால் நாம் அதனை செய்தோம். பயங்கரவாதத்தை இல்லாதொழித்து மக்களுக்கு சிறந்த வாழ்க்கையை வாழ்வதற்கு வழிசெய்ததன் பின்னர் தற்போது எமது பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதே தற்போது எமக்குள்ள பொறுப்பாகும்.
 
பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை பெற்றுக் கொடுத்தாலேயே சிறந்த பிரஜைகளை உருவாக்கி, நாட்டிற்கு செயற்திறன்மிக்க பிரஜைகளை தோற்றுவித்து வருமான மார்க்கங்களை உருவாக்குவது சாத்தியமாகும்.
 
எனவே, இன்றைய இளைஞர்கள் தொழில்நுட்பக் கல்லூரியில் இணைந்து அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நான் எதிர்பார்க்கின்றேன்.
இன்று பெரும்பாலும் பாடசாலைகளில் தொழில்நுட்பக் கல்லூரிகள் தொடர்பில் அறிவிக்கப்படுவதில்லை. இருப்பினும், அனைத்து பாடசாலைகளிலும் உயர்தரப் பரீட்சையின் பின்னர் இப்பிள்ளைகளுக்கு தொழில்நுட்ப கல்லூரியில் இணைவது குறித்து புரிதலை ஏற்படுத்துமாறு பல சந்தர்ப்பங்களிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு கற்பிக்கப்படும் கற்கைநெறிகள் குறித்து பிள்ளைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.  அப்போதுதான் அப்பிள்ளைகள் தொழில்நுட்பக் கல்லூரி தொடர்பில் கவனம் செலுத்துவார்கள்.
 
அதை நாம் அப்பிள்ளைகளுக்கு தெளிவுபடுத்தினால் மாத்திரமே அந்த இளைஞர்களை தொழில்நுட்பக் கல்லூரிகளுக்குள் ஈர்க்க முடியும். நாங்கள் அந்த பணியை செய்ய வேண்டும் என்று நான் எதிர்பார்க்கின்றேன்.
 
குறித்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர்களான சீதா அரம்பேபொல, பியங்கர ஜெயரத்ன, சனத் நிசாந்த, லொஹான் ரத்வத்தே, பாராளுமன்ற உறுப்பினர்களான சிந்தக மாயாதுன்னே, அசோக பிரியந்த, அலி சப்லி ரஹீம், தொழில்நுட்ப கல்வி பயிற்சித் துறை பணிப்பாளர் நாயகம் திருமதி பி.என்.கே மலலசேகர, ஆணைமடு தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் திரு. ஐ.எஸ்.கே.ஜெயரத்ன உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts