பட்டிருப்புத் தொகுதியில் த.தே.கூ சார்பாக தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவிப்பு

தமிழரசுக் கட்சியின் கொள்கைகளை ஏற்று பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில் பட்டிருப்புத் தொகுதியில் அக்கட்சி சார்பாக தேர்தலில் போட்டியிட விரும்புவதாக இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளார் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் பூ.கணேசலிங்கத்தின் திருவுருவச் சிலை திரைநீக்க விழா மட்டக்களப்பில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிலையில் அதில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் கூறுகையில், “அமரர்.கணேசலிங்கம் ஐயா நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் தமிழர்களின் உரிமைகளைப் பெறுவதற்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர். அத்துடன், பட்டிருப்புத் தொகுதி மக்கள் மட்டுமன்றி முழு மாவட்டத்திற்குமே சிறந்த அபிவிருத்திப் பணியினை மேற்கொண்டமையும் அனைவரும் அறிந்த விடயம்.

அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக இருந்து அரசியல் பயணத்தைத் தொடர்ந்திருந்தாலும் பின்னர் அக்கட்சியினுடைய கொள்கையில் வெறுப்புற்று தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைக் கருத்திற்கொண்டு தமிழரசுக் கட்சியில் இணைந்து பயணித்தவர்.

அதுபோலவே, எனது அரசியல் பிரவேசம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினூடாக அறிமுகமாகியிருந்தாலும் அக்கட்சியில் இருந்து தமிழ் மக்களுக்கு எந்தவிதமான உரிமையையும் பெற்றுக்கொள்ள முடியாது என அறிந்து பின்னர் தமிழரசுக் கட்சியின் கொள்கைகளை ஏற்று பயணித்துக் கொண்டிருக்கின்றேன்.

2015இற்குப் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் இல்லாமல் நட்டாற்றில் துடுப்பிழந்த படகைப் போல் பயணித்து கொண்டிருக்கும் பட்டிருப்புத் தொகுதி மக்களுக்காக நான் தமிழரசுக் கட்சியில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புகிறேன்.

Related posts