பிரதமர் ரணிலின் கோரிக்கையை அதிரடியாக நிராகரித்த விக்னேஸ்வரன்.!!

நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தமிழ் மக்கள் கூட்டணியுடன் தனிமையான பேச்சுவார்த்தைகளை நடத்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க தம்மிடம் கோரியமையை தாம் நிராகரித்துள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் முன்னாள் வட மாகாண முதலமைச்சருமான சீ.வீ . விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
 

வடக்கு கிழக்கில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சிகளினால் தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பாக தகுந்த தீர்வு ஒன்றை பெறும் நோக்கில், பல கோரிக்கைகளை பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் மத்தியில் முன் வைத்துள்ளனர்.

 

எனவே, தனிமையான பேச்சுவார்த்தைகளுக்கு இடமில்லை எனவும் அனைத்து தமிழ் கட்சிகளுடன் ஒன்றிணைந்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க தயார் எனவும் முன்னாள் வடமாகாண முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். வடக்கு கிழக்கில் தமிழ் அரசியல் கட்சிகள் கூட்டாக இணைந்து 13 கோரிக்கைகளை முன்வைத்துள்ள நிலையில் அது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாயின், அனைத்து கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என அவர் பிரதமருக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்தக் கோரிக்கைகள் தொடர்பாக, சிறந்த பதிலை வழங்கும் வேட்பாளருக்கே இம்முறை தேர்தலின் போது தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகளை தொடர்ந்தே இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ் மக்கள் முன்னணியின் தலைவர் சீ .வீ. விக்னேஸ்வரன்,ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் இந்த தீர்மானத்தை முன்னெடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts