பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பிய பெற்றோருக்கு நன்றி ;அகில விராஜ் காரியவசம்

குறுகிய அரசியல் நோக்கத்திற்காக செயற்படும் குழுக்களின் போலியான பிரசாரங்களை புறந்தள்ளி பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பிய பெற்றோர்களுக்கு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் நன்றி தெரிவித்துள்ளார்.

அனைத்து பாடசாலைகளினதும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதாக பாதுகாப்பு துறை அறிவித்ததன் பின்னர் நாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகள் அனைத்தும் இரண்டாம் தவணைக்காக ஆரம்பிக்கப்பட்டது.

இது தொடர்பில் கல்வி அமைச்சர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மாணவர்களின் வரவு குறைந்த மட்டத்தில் இருந்ததாக தெரியவருகின்றது. கொழும்பு நகர பாடசாலைகளின் வரவு பெருமளவில் குறைந்திருந்த போதிலும் கிராமிய பாடசாலைகளின் வரவு அதிகரித்திருந்ததாக கல்வி அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அத்துடன் இன்றைய அனைத்து பாடசாலைகளிலும் ஆசிரியர்களினதும் பாடசாலை ஊழியர்களினதும் வருகை உயர்ந்த மட்டத்தில் இருந்தமை விசேட அம்சமாகும்.

ஆனாலும் முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையான ஆரம்ப பிரிவுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவில்லை. எதிர்வரும் 13 ஆம் திகதி 1-5 வரையான வகுப்புகளுக்கான இரண்டாம் தவனைக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. எவ்வாறாயினும் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

Related posts