புதிதாக மேம்படுத்தப்பட்ட குஷினகர் விமான நிலையத்தில் முதல் சர்வதேச விமானத்தை தரையிறக்குவதற்கு இந்திய பிரதமர் இலங்கைக்கு அழைப்பு….

புதிதாக மேம்படுத்தப்பட்ட குஷினகர் விமான நிலையத்திற்கு முதல் சர்வதேச விமானத்தை தரையிறக்குவதற்கு இலங்கைக்கு அழைப்பு விடுப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் குறிப்பிட்டார்.
 
அண்மையில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றமை குறித்து வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் வகையில் இன்று பிற்பகல் அலரி மாளிகையில் பிரதமரை சந்தித்தபோதே இந்திய உயர் ஸ்தானிகர் இந்த அழைப்பை விடுத்தார்.
 
பிரதமர் மோடி பௌத்த மதத்தை மேம்படுத்துவதில் ஆர்வம் காட்டுவதாகவும், சுற்றுலாத்துறை மட்டுமல்லாமல் தொல்பொருள் போன்ற பிற துறைகளுடன் தொடர்புடைய திட்டங்களைத் தொடங்குவதிலும் கவனம் செலுத்தியுள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகர் பாக்லே இதன்போது கூறினார்.
 
இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ள எயர் இந்தியா விமான விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதன்போது தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
 
தற்போது நடைபெற்று வரும் திட்டங்களுக்கு மேலதிகமாக, நீர் மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளிலும் இலங்கைக்கு உதவுவதில் இந்தியா மகிழ்ச்சியடைவதாக  இந்திய உயர் ஸ்தானிகர் பாக்லே தெரிவித்தார்.
 
இறுதி முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பே பிரதமர் மோடியிடமிருந்து தொலைபேசி அழைப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
 
சூரியன் உதயமாவது போன்று பிரதமரின் வெற்றி குறித்து நம்பிக்கை கொண்டிருந்ததாக தெரிவித்த இந்திய உயர் ஸ்தானிகர், பிரதமரின் ஆசீர்வாதத்துடன் முன்னோக்கி செல்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் மேலும் குறிப்பிட்டார்.
 
பிரதமர் ஊடக பிரிவு

Related posts