போதைப்பொருளுக்கு எதிரான யுத்தம் புதிய பரிமாணங்களில் முன்னெடுக்கப்படும்: ஜனாதிபதி!

போதைப்பொருளுக்கு எதிரான யுத்தம் புதிய பரிமாணங்களில் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு கோட்டைக்கும், காங்கேசன்துறைக்கும் இடையில் உத்தரதேவி என்ற புதிய ரயில்சேவை ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கொழும்புக் கோட்டை ரயில் நிலையத்தில் ‘போதையிலிருந்து விடுதலையான நாடு’ எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்நிகழ்வினை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“போதைப்பொருள் தடுப்பிற்காக கடந்த நான்கு ஆண்டுகளில் மேற்கொண்ட வேலைத்திட்டங்கள் இந்த ஆண்டு முதல் புதிய தோற்றத்துடன் நடைமுறைப்படுத்தப்படும்.

இலங்கையிலிருந்து போதைப்பொருட்களை இல்லாதொழிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுவரும் தேசிய வேலைத்திட்டங்களுக்கு கட்சி வேறுபாடின்றி ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு அங்கமாகவே இன்றைய இந்த ரயில்சேவை நிகழ்வும் இடம்பெறுகின்றது.  இது ஒரு வழிப்புணர்வு நடவடிக்கையாகவே முன்னெடுக்கப்படுகின்றது.

இதனடிப்படையில் ‘போதையிலிருந்து விடுதலையான நாடு’ எனும் மகுடவாக்கியத்துடன் வடக்கையும் தெற்கையும் இணைக்கும் இந்த ரயில்சேவை ஆரம்பிக்கப்படுகின்றது” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் குறிப்பிட்டார்.

Related posts