போலி முகநூலுக்கூடாக அவதூறுகளைப் பரப்பிய விவகாரம் ! 11 பேர் கைது

போலி முகநூலுக்கூடாக அவதூறுகளைப் பரப்பிய விடயத்தில் தொடங்கிய சர்ச்சை நபரக்ளுக்கிடையிலான நேரடித் தாக்குதலாக மாறியதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தோடு சம்பந்தப்பட்ட போலி முகநூல் குழுவைச் சேர்ந்த இருவர் உட்பட தாக்குதலில் ஈடுபட்ட 9 பேருமாக மொத்தம்  11 பேர் ஞாயிற்றுக்கிழ இரவு (14.10.2018)கைது செய்யப்பட்டிருப்பதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

பொதுமக்களால் நையப்புடைக்கப்பட்ட போலி முகநூல் குழுவைச் சேர்ந்தவர் எனக் கருதப்படும் சந்தேக நபர் ஒருவரின் தாயார் தாக்குதலின்போது காயங்களுக்குள்ளான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நீண்ட காலமாக போலி முகநூலின் ஊடாக உருவாகி வந்த முகநூல் சண்டை ஞாயிற்றுக்கிழமை இரவு (14.10.2018)நேரடிக் கைகலப்பில் ஈடுபடுமளவுக்கு விஸ்வரூபம் எடுத்து அதன் மூலமாக தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

இச்சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது:-காத்தான்குடியில் உள்ள, தங்களுக்குப் பிடிக்காத  பல்வேறு தரப்பினரையும் இழிவுபடுத்தும் வகையில் குறிப்பிட்ட போலி முகநூல் பக்கத்தினூடாக அவதூறுகளும், புறங்கூறுதலும் பின்னூட்டல்களும், இடம்பெற்றுவந்துள்ளன.

இதனால், ஒருவர் மீது ஒருவர் பரஸ்பரம் சந்தேகங் கொள்ளும் வகையில் உள்ளுருக்குள் குழப்பநிலையும் உருவாக்கப்பட்டு வந்துள்ளதாக பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கின்றனர்.இருந்த போதிலும், அமைதிக்குப் பங்கம் ஏற்படுத்தும் வகையில் நீண்ட காலமாக செயற்பாட்டில்  இருந்து வந்த இந்த போலி முகநூல் குழுமத்தைக் கண்டு பிடிக்க முடியாமல் அனைவரும் ஏமாற்றமடைந்திருந்ததாகத் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, ஞாயிற்றுக்கிழமை இரவு (14.10.2018)குறிப்பிட்ட போலி முகநூல் குழுவினர் தங்களது போலி முகநூல் வழியாக மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தவாறே நேரலை ஒன்றை வழங்கிக் கொண்டிருந்துள்ளனர்.

இவ்வேளையில் எதிர்பாராத விதமாக அவர்கள் பயணம் செய்த மோட்டார் சைக்கிளின் முன்பக்க கண்ணாடியில் நேரலை வழங்கிய முகநூல் குழு உறுப்பினரின் முகமும் அவர் அணிந்திருந்த கைக் கடிகாரமும் அவர்கள் பயணித்துக் கொண்டிருந்த கடற்கரைப் பகுதியும் தென்பட்டுள்ளது.

இதனை அறிந்து கொண்ட மாற்றுக் குழுவினர் உடனடியாக களத்தில் இறங்கி சம்பந்தப்பட்ட சந்தேகத்துக்குரிய போலி முகநூல் குழுவிரை வழிமறித்துத் தகராறில் ஈடுபட்டபோது தாக்குதல் இடம்பெற்றுள்ளது. தனது மகனும் தாக்கபப்டுகிறார் என அறிந்து அங்கு ஓடோடிச் சென்ற ஒரு பெண்ணும் தாக்குதலின் விளைவாகக் காயமடைந்தார் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனை அறிந்து ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் 9 பேர் உட்பட போலி முகநூல் குழுமத்தினர் எனக் கருதப்படும் சந்தேகத்துக்குரிய இரு இளைஞர்கள் என மொத்தம் 11 பேரைக் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.

Related posts