மட்டக்களப்பில் அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது

சிறைச்சாலைகளில் பல காலமாக உள்ள அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மட்டக்களப்பு காந்தி பூங்காவில் செவ்வாய்க்கிழமை(5)காலை 9.00 மணியளவில் சிறைக்கைதிகளின் உறவினர்களினால்  இடம்பெற்றது.

இக்கவனயீர்ப்பு போராட்டத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன்,பா.அரியநேந்திரன்,தமிழ் தேசிய முன்னணியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ்,அரசியல் கைதிகளின் உறவினர்கள்,தொண்டு நிறுவன உறுப்பினர்கள்,மத தலைவர்கள்,அரசியல் பிரதிநிதிகள்  கலந்து கொண்டனர்.

இதன்போது சிறைக்கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும்,அவர்களை துரிதமாக விடுவிக்குமாறு கோரியும் கவனயீர்ப்பு மாபெரும் போராட்டம் இடம்பெற்றதுடன் “விடுதலை செய்”;”விடுதலை செய்” தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்”,தமிழ் அரசியல் கைதிகளின்மீது பாரபட்சம் காட்டாதே!!,”கொரோனோ அச்சத்திற்கு மத்தியிலும் தமிழ் அரசியல் கைதிகளை தடுத்து வைத்திருப்பது மனித உரிமை மீறலாகும்” என போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தார்கள்.இதன்போது தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு நாட்டினுடைய ஜனாதிபதி  நடவடிக்கை எடுக்கவேண்டுமென போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பதாதைகளை தாங்கியவாறு கோரிக்கை விடுத்தார்கள்.
அத்துடன் இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம் ஒரு மகஜரும் கையளிக்கப்பட்டது.

Related posts