மட்டக்களப்பில் யானைகளுக்கும் மனிதர்களுக்கு இடையில் ஏற்படுகின்ற மோதலைத் தடுப்பதற்கு வனஜீவராசிகள் திணைக்களத்திற்குப் போதிய வசதிகள் இல்லை… (பாராளுமன்ற உறுப்பினர் – கோ.கருணாகரம் ஜனா)

மட்டக்களப்பில் யானைகளுக்கும் மனிதர்களுக்கு இடையில் ஏற்படுகின்ற மோதலைத் தடுப்பதற்கு வனஜீவராசிகள் திணைக்களத்திற்குப் போதிய வசதி வாய்ப்புகள் இல்லை. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக மூன்றே மூன்ற அலுவலகங்களும் பதினைந்து உத்தியோகத்தர்களுமே இருக்கின்றார்கள். கடந்த காலங்களில் நடைபெற்ற அந்த உயிரிழப்புகளைக் கருத்திற்கொண்டு மேலும் மூன்று புதிய அலுவலகங்களாவது மட்டக்களப்பில் அமைக்கப்படல் வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்தார்.
 
இன்றைய தினம் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வனஜீவராசிகள் திணைக்களம் தொடர்பான உரையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
மனிதர்களுக்கும் யானைக்கும் இடைப்பட்ட மோதல்களைப் பற்றி எமது இராஜாங்க அமைச்சர் விளக்கவுரையாற்றினார். யானைகளும் பாதுகாக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் மனித உயிர்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது நாங்கள் வலியுறுத்திக் கூறுகின்ற விடயம்.
 
மட்ட்களப்பு மாவட்டத்தல கடந்த பத்து ஆண்டுகளின் 117 மனித உயிர்கள் யானைகளால் காவுகொள்ளப்பட்டிருக்கின்றது. அதே நேரத்தில் இந்த பத்து வருடத்தில் 135 யானைகளும் கொல்லப்பட்டிருக்கின்றன. மனிதர்கள் தங்களது வாழ்வாதாரத்தையும், உயிர்களையும், தங்கள் சொத்துக்களையும், உழைப்புகளையும் பாதுகாப்பதற்கு யானை வேலிகளிலே ஏற்படுத்தப்பட்டிருக்கும் மின்சாரத் தாக்கத்தினாலும் இந்த யானைகள் பலியாக்கப்பட்டிருக்கின்றன.
 
மட்டக்களப்பில் யானைகளுக்கும் மனிதர்களுக்கு இடையில் ஏற்படுகின்ற மோதலை சிறப்பகத் தடுப்பதற்கு வனஜீவராசிகள் திணைக்களத்திற்குப் போதிய வசதி வாய்ப்புகள் இல்லை. கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் பிரதேசத்திற்கு இரண்டு வனஜீவராசிகள் அலுவலகங்கள் இருந்தாலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக மூன்றே மூன்ற அலுவலகங்களும் பதினைந்து உத்தியோகத்தர்களுமே இருக்கின்றார்கள். அதிலும், ஒரே ஒரு பிராந்திய அலுவலகமும், இரண்டு உப அலுவலகங்களுமே இருக்கின்றன.
 
கடந்த காலங்களில் நடைபெற்ற அந்த உயிரிழப்புகளைக் கருத்திற்கொண்டு மேலும் மூன்று புதிய அலுவலகங்களாவது மட்டக்களப்பில் அமைக்கப்படல் வேண்டும். வெல்லாவெளியில் இருக்கும் அலுவலகம் தரமுயர்த்தப்படல் வேண்டும் என்பதற்கு மேலாக ஒரேயொரு பழுதடைந்த வாகனத்துடன் பதினைந்து உத்தியோகத்தர்கள் எவ்று யானைகளிடமிருந்து மனிதர்களையும், மனிதர்களிடமிருந்து யானைகளையும் காப்பாற்றுவார்கள் என்பதை உணர்ந்து கொண்டு மட்டக்களப்பு மாவட்டத்தைப் பாதுகாக்க வேண்டும்.
 
மட்டக்களப்பிலே 176 கிலோமீட்டருடைய பதினாறு யானை வேலிகள் இருக்கின்றன. எதிர்காலத்தில் 107 கிலோமீட்டர் வேலிகள் அமைக்க இருப்பதாக அறிகின்றோம். அதனைச் சற்ற அதிகரித்து வேலிகள் அமைப்பது மாத்திரமல்லாமல் யானைகள் அந்த வேலிகளை உதைத்துவிட்டு வருகின்றது எனவே அதற்கேற்றால் போல் அந்த வேலிக்கட்டைகளில் கம்பி சுற்றுவதும், வேலிகளுக்குக் கொடுக்கப்படும் மின்சாரத்தின் அளவினை அதிகரிகக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
அத்துடன், வன இலாகாவினர் பண்ணையாளர்களை மிகவும் துன்புறுத்துகின்றார்கள். அவர்கள் தங்கள் பண்ணைகளுக்குச் செல்லும் போது பண்ணையாளர்களைக் கைது செய்து தண்டம் அறிவிடுவதையும் நிறுத்த வேண்டும்.
 
அதுமாத்திரமல்லாமல் முல்லைத்தீவில் கூட இருபத்து மூவாயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் நான்கு பிரதேசங்களில் வன இலாகாவினால் அபகரிக்கப்பட இருக்கின்றது. அவைகளை நிறுத்தித் தருவதுடன், தேசிய பூங்காக்களையம். வனிஜீவராசிகள் சரணாலயங்களையும் பிரகடணப்படுத்தியுள்ள எல்லைகளை மீளமைத்தல் என்ற அடிப்படையில் முன்னாள் வனஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரோராவினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவை அங்கீகாரத்தை வழங்கியிருந்தது. காயான்கேணி சமூத்திர இயற்கை ஒதுக்கம் பிரகடணப்படுத்தப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அதனையும் பிரகடணப்படுத்தல் வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன் என்று தெரிவித்தார்.
 
 

Related posts