மேலதிக 10 வாக்குகளால் நிறைவேறியது மட்டக்களப்பு மாநகரசபையின் 2022க்கான பாதீடு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட மட்டக்களப்பு மாநகரசபையின் 2022ம் ஆண்டுக்கான பாதீடு சமர்ப்பிக்கும் விசேட சபை அமர்வானது இன்றைய தினம் மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது.
 
இவ்வமர்வில் மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன் உட்பட சபை உறுப்பினர்கள், பிரதி ஆணையாளர், கணக்காளர் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
 
சபைச் சம்பிரதாயங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட மேற்படி அமர்வில் 2022ம் ஆண்டுக்கான வரவு செலவு அறிக்கை மாநகர முதல்வரால் சமர்ப்பிக்கப்பட்டு வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றிருந்தன.
 
இறுதியில் பாதீடு நிறைவேற்றத்திற்கான வாக்கெடுப்பு நடைபெற்றது. இதன் போது பாதீட்டுக்கு ஆதரவாக 23 வாக்குகளும், எதிராக 13 வாக்குகளும் ஒருவர் நடுநிலைமை வகித்ததுடன், ஒரு உறுப்;பினர் சபை அமர்விற்கு சமுகம் கொடுக்கவில்லை.
 
38 உறுப்பினர்களைக் கொண்ட மேற்படி சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 15 உறுப்பினர்கள், தமிழர் விடுதலைக் கூட்டணியின் நான்கு உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு உறுப்பினர், சுயேட்சைக்குழு உறுப்பினர் ஒருவர் என இருபத்து மூன்று உறுப்பினர்கள் பாதீட்டு ஆதரவாக வாக்களித்தனர்.
 
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஐந்து உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இரண்டு உறப்பினர்கள், ஈபிடிபி உறுப்பினர் ஒருவர், சுயேட்சைக்குழு உறுப்பினர்கள் இருவர், ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு உறுப்பினர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவர் என பதின்மூன்று உறுப்பினர்கள் பாதீட்டுக்கு எதிராக வாக்களித்தனர்.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரு உறுப்பினர் பாதீட்டுக்கு நடுநிலைமை வகித்ததுடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு உறுப்பினர் சபை அமர்வில் கலந்துகொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts