மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் முகமாக மட்டக்களப்பு மாநகரசபையினால் 1000 நாள் வேலைத் திட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில்  சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் முகமாக மட்டக்களப்பு மாநகரசபையினால் 1000 நாள் வேலைத் திட்டம் 1000 வேலைவாய்ப்பு என்ற தொனிப் பொருளில் திட்டமொன்றினைத் தயாரித்துள்ளோம் என மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாநகரசபையின் செயற்பாடுகள் சம்பந்தமாக (9) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்:-
மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்துறைசார் நிபுணத்துவம் கொண்டவர்களின் பற்றாக்குறை காரணமாக சுற்றுலாத்துறையின் 95 சதவீத உயர் பதவிகளுக்கு வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே இணைக்கப்பட்டுள்ளனர்.
ஆதலால் எமது சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் முகமாக மட்டக்களப்பு மாநகரசபையினால் 1000 நாள் வேலைத் திட்டம் 1000 வேலைவாய்ப்பு என்ற தொனிப் பொருளில் திட்டமொன்றினைத் தயாரித்துள்ளோம்.அதில் 24 சுற்றுலா மையங்களை விருத்தி செய்து 1000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு எமது மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகளாக வருபவர்கள் குறைந்தது இரண்டு நாட்கள் தங்கியிருந்து 1000 டொலர்கள் வரைச் செலவு செய்து எமது மாநகர வாழ் மக்களுக்கு வருமானத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் எங்களது நிகழ்ச்சித் திட்டம் உருவாக்கப்படவுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வருடாந்தம் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரத்துடன் 46 சதவீதமான 5650 இளைஞர்கள் இடைவிலகுகிறார்கள். இவர்களுக்கு சரியான வழிகாட்டல் இல்லாதவிடத்து அனைவரும் சாதாரண தொழிலாளி வர்க்கத்திற்குள் இணைந்து விடுவார்கள். ஆகவே இந்த நிலையைத் தவிர்ப்பதற்காக மாற்று வழிகளை நாம் ஏற்படுத்த வேண்டும்.எனவேதான் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் அதிக பங்களிப்புச் செய்யக்கூடிய துறைகளில் ஒன்றான சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்து எமது பிரதேச இளைஞர் யுவதிகளை இந்த துறைகளில் உள்வாங்கி அவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் சக்தியாக எமது மாவட்டத்தை மாற்ற வேண்டும்.
நாட்டில் 2030ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் பாரிய அபிவிருத்தி திட்டங்களை ஆய்வு செய்யும் போது சுற்றுலாத்துறை மற்றும் கட்டுமானத்துறைகளிலும் அதிக வேலைவாய்ப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

Related posts