களுதாவளை பிரதேசசபைக்குட்பட்ட நெடுஞ்சாலை வீதிகளிலும் கிராமங்களிலும் பயணிக்க முடியாத நிலை

களுதாவளை பிரதேசசபைக்குட்பட்ட நெடுஞ்சாலை வீதிகளிலும்,கிராமங்களிலும் பயணிக்க முடியாத அளவுக்கு நாளாந்தம். கட்டாக்காலி மாடுகள்,நாய்கள் அதிகரித்து காணப்படுகின்றது
இதனால்வாகனத்தில் பயணிக்கும் பொதுமக்கள், வாகன சாரதிகள் விபத்தில் சிக்கி உயிரிழப்பதும்,காயப்படுவதுமாக தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருகின்றது.இவ்விடயமாக பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் எடுத்தாலும் களுதாவளை பிரதேசசபை தவிசாளர் மற்றும் செயலாளர், உறுப்பினர்கள் அமுல்படுத்துவதில் பாரியதொரு சிக்கல் தோன்றுவதாக குறிப்பிடுகின்றார்கள்.

களுதாவளை பொது சந்தை கவனிப்பார் இன்றி காணப்படுகிறது.இச்சந்தைக்கு பொருட்களை கொள்வனவு செய்ய வருகின்ற பொதுமக்கள் தங்களின் வாகனங்களை மழையிலும்,வெயிலிலும் நிறுத்திவிட்டுச் செல்கின்றனர்.இச்சந்தைக்கு சுமார் 15 வருடகாலமாக பொதுவான வாகனத்தரிப்பிடம் இல்லாமல் காணப்படுகின்றது.

இந்த பிரதேசத்தில் உள்ள மிக பெரிய பொது விளையாட்டு மைதானமாக காணப்படும் களுதாவளை விளையாட்டு மைதானம் எதுவித பராமரிப்பு இன்றி காணப்படுவதோடு முன் மதில் பூரணமாக பழுதடைந்து காணப்படுகிறது. களுதாவளை,செட்டிபாளையம்,தேற்றாத்தீவு,மாங்காடு,குருமண்வெளி,களுவாஞ்சிகுடி,எருவில்,கோட்டைக்கல்லாறு,பெரியகல்லாறு ,துறைநீலாவணை விளையாட்டு மைதானங்கள் எதுவித புனரமைப்பும் இன்றி காணப்படுகின்றது.இவற்றை உடனடியாக திருத்தி கொடுக்கப்பட வேண்டும்.

துறைநீலாவணையில் உள்ள வீதிகளுக்கு இதுவரையும் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் வீதிகளுக்கு பெயர்பலகை இடப்படவில்லை.இ்ப்பிரதேசசபைக்குட்பட்ட குருக்கள்மடம் முதல் துறைநீலாவணை வரையான கிராமங்களில் உள்ள பொதுமக்களுக்கு பிரதேசசபையால் திண்மக்கழிவகற்றல் சம்பந்தமான பயிற்சி வழங்காததால் வீடுகளில் கிடைக்கப்பெறும் கழிவுகளை வீதிகளிலும் ,வடிகாண்களிலும், தனியார் காணிகளிலும், குளக்கட்டுகளிலும், மாயானங்களிலும், பொதுவிடங்களிலும் வீசிவிட்டு  செல்கின்றார்கள்.

இதேவேளை பிரதேச சபைக்குட்பட்ட சிறுவர்களின் ஆற்றல்களை வெளிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட சிறுவர்பூங்கா கறல்பிடித்து தூர்ந்துபோயுள்ளது. இன்னும் பல கிராமங்களில் சிறுவர் பூங்காக்கள் அமைக்கப்படவேண்டும்.பிரதேச சபைக்குட்பட்ட நெடுஞ்சாலை வீதிகள் ஊடறுத்துச் செல்லும் பெரியகல்லாறு,கோட்டைக்கல்லாறு பாலங்களில் தெருவிளக்குகள் அதிகரிக்கப்படவேண்டும்.

பிரதேச சபைக்குட்பட்ட கிறவல்வீதிகள்,மணல்வீதிகள் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக காணப்படுகின்றது. மாணவர்கள்,பொதுமக்கள், வாகனச்சாரதிகள் பல்வேறு அசௌரியங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றார்கள். தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழையால் பல வீதிகளில் வெள்ளநீர் வடிந்தோடாமல் வீதிகளில் குளமாகவும், குட்டையாகவும் உள்ளது.பிரதேச சபையின் கனரக வாகனத்தையும், ஆளனணியினரையும், பிரதேசத்தில் உள்ள வளங்களையும் கொண்டு வெள்ளநீரை வெளியேற்றி வீதியை சிறப்பாக வைத்திருக்க முடியும்.இவ்வாறு 100க்கு மேற்பட்ட வீதிகள் காணப்படுகின்றது.

Related posts