மட்டக்களப்பு மாவட்டம் உட்பட 19 மாவட்டங்களுக்கான ஊரடங்கு தொடர்பான அறிவிப்பு

மட்டக்களப்பு மாவட்டம் உட்பட நாட்டின் 19 மாவட்டங்களில் அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு நாளை (16) காலை 6 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது.

இவ்வாறு தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம் மீண்டும் நாளை மாலை 4 மணிக்கு அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் கொழும்பு, புத்தளம், களுத்துறை, கண்டி, யாழ்ப்பாணம் மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்தும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும்.

ஊடரங்குச் சட்டம் தளர்த்தப்படும் காலப்பகுதியில் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து ஏனைய தேவைகளுக்காக மாவட்டத்தை விட்டு வெளியேறுவது முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் வேறு பொருட்களை வீடுகளில் இருந்தே பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் தொடர்ச்சியாக வழங்களை மேற்கொள்ள அரசாங்கம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

எந்த மாவட்டத்திலாயினும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் சிறு தேயிலை தோட்டங்கள், ஏற்றுமதி பயிர்கள் உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட மக்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

Related posts