மட்டக்களப்பு மாவட்ட டெங்கு தடுப்பு செயலணிக் கூட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு தடுப்பு செயலணிக் கூட்டம் இன்று மாலை செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந் தலைமையில் நடைபெற்றது.
 
மாவட்டத்தின் 14 பிரதேச பிரிவுகளிலும் 07 பிரதேச பிரிவுகளிலே அதிகமாக டெங்கு நுளம்பின் தாக்கமும் பரவலும் காணப்படுகின்றது. இதனை கட்டுபடுத்தும் முகமாக சுகாதார வைத்திய அதிகாரி பிரதேச சபைகளின் செயலாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் வலயக்கல்வி அதிகாரிகள் ஆகியோரின் இணைந்த செயற்பாட்டின் மூலமாகவே டெங்கு நுளம்பினை கட்டுப்படுத்தி கொள்ள முடியும் என பிரஸ்தாபிக்கப்பட்டது.
 
மக்களுக்கு போதுமான தெளிவூட்டல்களை வழங்குவதும் வீடு வீடாக சென்று சோதனை நடவடிக்களை மேற்கொண்டு ஆலோசனை வழங்குவதற்கு தேவையான ஆளணிகளை புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பட்டதாரி பயிலுனர்கள் மற்றும் ஒரு லட்சம் வேலை வாய்ப்பில் அமர்த்தப்பட்டவர்களை சுகாதார வைத்திய அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றும் படி மேலதிக அரசாங்க அதிபர் பணிப்புரை விடுத்தார்.
 
மாவட்டத்தில் கடந்த மாதம் இரண்டு மரணங்கள் பதிவாயுள்ளது. குறிப்பாக 12 வயதிற்கு குறைந்த சிறுவர்கள் 40 வீதத்திற்கும் அதிகமாக பாதிக்கப்பட்டு வருவது குறிப்ரிடத்தக்கது. குறிப்பாக மட்டக்களப்பு நகரப்பகுதி, ஒட்டமாவடி மத்தி, காத்தான்குடி, கோரளைப்பற்று, ஏறாவூர் நகர், ஒட்டமாவடி, கிரான் ஆகிய பிரதேசங்களிலே அதிக அளவான டெங்கு நோயாளர்கள்  பதிவாகி வருகின்றனர். கடந்த மாதங்களை விடவும் இம்மாதம் 50 வீதமான டெங்கு நோயாளர்கள்  பதிவாகியுள்ளனர்.
 
இந்த டெங்கு நோய் பரவலை பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் தங்களின் வீடுகளில் உள்ள கழிவுகளை முறையாக அகற்றி டெங்கு நுளம்பு பெருகுகின்ற இடங்களை நுத்தப்படுத்தி இந்நோய் பரவலில் இருந்து விலகிக் கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டது.
 
இக் கூட்டத்தில் சுகாதார வைத்திய அதிகாரிகள், பிரதேச சபைகளின் செயலாளர்கள், பிராந்திய சுகாதார பணிமனை, வைத்திய அதிகாரிகள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், உதவி திட்டமிடல் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
????????????????????????????????????

Related posts