மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் தமிழ்பாட ஆசிரியை செல்வி கந்தையா றோகினி ஓய்வு

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் தமிழ்பாட ஆசிரியை செல்வி கந்தையா றோகினி மட்டக்களப்பு மாணவ சமுதாயத்திற்கு சிறப்பான கல்விப்பணியை ஆற்றிவிட்டு கடந்த வெள்ளிக்கிழமை(5.2.2021)தனது அறுபதாவது வயதில் ஓய்வு பெற்றுள்ளார்.

1961.2.7இல் மட்டக்களப்பு வந்தாறுமூலை மண்ணில் அவதரித்து மட்டக்களப்பு நகரில் தற்போது வசித்து வருகின்றார்.இவர் வந்தாறுமூலை மகாவித்தியாலயம்,வின்சன்ட் உயர்தர பெண்கள் தேசிய பாடசாலை போன்ற பாடசாலைகளின் பழைய மாணவியும் ஆவார்.தமிழ்பாட ஆசிரியையான செல்வி றோகினி கந்தையா 1988.4.6இல் தமது ஆசிரியர் முதல் நியமனத்தை பெற்றுக்கொண்டு கரடியனாறு தமிழ் மகாவித்தியாலயத்தில் கடமையை பொறுப்பேற்று “மாணவர்களின் அறிவுப்பசியை மெல்ல மெல்ல போக்கணும்”எனும் சிந்தனையுடன் செயற்பட்டார்.அக்காலத்தில் நாட்டில் நிலவிய போர்ச்சூழலிலும் துணிச்சலுடன் பாடசாலைக்கு சென்று  தமது கற்றல் செயற்பாடுகளை மாணவர்களுக்கு உத்வேகத்துடன் கற்பித்து வந்தார்.அதன் பின்னர் கல்குடா கல்வி வலயத்தில் உள்ள கறுவாக்கேணி விவேகானந்தா வித்தியாலயம்,சந்திவெளி சித்தி விநாயகர் வித்தியாலயம்,செங்கலடி மத்திய கல்லூரி மற்றும் காத்தான்குடி மெத்தைப்பள்ளி,ஏறாவூர் தமிழ் மகாவித்தியாலயம்,மயிலம்பாவெளி சித்தி விநாயகர் வித்தியாலயம்,போன்ற பாடசாலைகளில் தமிழ்பாடத்தை மாணவர்களுக்கு கற்பித்து மாணவர்களுக்கு தமிழில் இருந்த அச்சத்தை துடைத்தெறிந்து மாணவர்களின் பெறுபேற்றை அதிகரிக்க செய்தார்.

பேராதெனிய பல்கலைக்கழகத்தின் வணிகப்பட்டதாரியான இவர் மாணவர்களுக்கு தமிழ்பாடத்தை தொடர்ச்சியாக கற்பித்து வந்தார். தமிழ்பாடத்தில் இலக்கியம்,இலக்கணத்தில் மிகுந்த தேர்ச்சியுடையவர்.பாடசாலைக் காலங்களில் சரியான நேரத்திற்கு வருகைதந்து மாணவர்களுக்கு ஒழுக்கம்,பண்பாடு,கலை,கலாசாரம் என்பனவற்றை ஊட்டி மாணவர்களை கற்றலில் தட்டிவிடும் ஆற்றலும்,ஆளுமையும் இவருக்கு சிறப்புண்டு.அதுமட்டுமல்லாமல் வாசிப்பதில் மிகுந்த ஈடுபாடு இருக்கின்றது.ஓய்வு நேரங்களில் பாடசாலை நூலகங்களுக்கு மாணவர்களை அழைத்துச்சென்று மாணவர்களை புத்தகங்களையும்,நூல்களையும்,பத்திரிகைகளையும் வாசிப்பதில் தூண்டிவிட்டு தானும் வாசிக்கும் ஆற்றல் இவருக்கு சிறுவயது முதல் இருக்கின்றது.அதனால்தான் தமிழ்பாடத்தை முதன்மையாக மாணவர்களுக்கு படிப்பிக்கும் ஆற்றலை இறைவன் இவருக்கு அருட்கொடையாக வழங்கியிருக்கின்றார்.

இலங்கை ஆசிரியர் சேவையில் முதலாம் தர ஆசிரியையான இவர் 2014 முதல் இன்றுவரையும் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் மாணவர்களுக்கு தமிழ்பாடத்தை தெட்டத்தெளிவாக கற்பித்து பல மாணவர்களின் உயர்ச்சிக்கு இவ்வாசிரியையும் பங்களிப்பு செய்திருக்கின்றார் என்பதை யாரும் மறக்கவோ அல்லது மறைக்கவோ முடியாது.இவர் 33 வருடங்கள்  ஆசிரியர்சேவையை சிறப்பாக மேற்கொண்டு தனது 60 வயதில் கடந்த வெள்ளிக்கிழமை(5)ஓய்வுபெற்றுள்ளார்.

Related posts