மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் “98ஆம் வருடத்திற்கான பழைய மாணவர்களின் கௌரவிக்கும்” நிகழ்வு.

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 98ஆம் வருடத்திற்கான பழைய மாணவர்களினால் தாங்கள் கல்வி கற்ற காலப்பகுதியில் அவர்களுக்கு கல்வி கற்பித்த அதிபர்களையும்,ஆசிரியர்களையும் பொன்னாடை போர்த்தி,நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் பழைய மாணவர் சங்கத்தின் பொதுச்செயலாளர் வைத்திய கலாநிதி நவரெட்ணம் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை(27)காலை 10.00 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் மெதடிஸ்த மத்திய கல்லூரியின் முன்னாள் அதிபர்களான ஏ.ஏ.அருளன்னராஜா,கே.ஜீ.அருளானந்தம்,ஐ.கமல்ராஜ்,ஜே.ஆர்.பீ.விமல்ராஜ்,தற்போதைய அதிபர் இ.பாஸ்கர்,கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர் ச.நவநீதன்,சிரேஸ்ட பொறியியலாளர் (லண்டன்)டவூல்யூ.துஷேந்திரா,விவசாய போதனாசிரியர் ரீ.மாதவன்,வில்லியம் ஓல்ட் நம்பிக்கை நிதியத்தின் செயலாளரும்,ஆசிரியருமான கே.சுபகாந்தன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

1986ஆம் ஆண்டுமுதல் 1998ஆம் ஆண்டு காலப்பகுதியில்  அம்மாணவர்களுக்கு கற்பித்து தங்களை இன்று சமுதாயத்தில் ஒரு உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்ற அதிபர்களையும்,ஆசிரியர்களையும் நன்றியோடு நினைவு கூர்ந்து அவர்களை பொன்னாடை போர்த்தி,நினைவுச்சின்னமும் வழங்கி,பரிசுப்பொருளையும் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு அவ் அதிபர்கள்,ஆசிரியர்களிடமிருந்து மனப்பூர்வமானதும்,மானசீகமானதுமான ஆசீர்வாதத்தினையும் பெற்றுக்கொண்டனர்.இந்த கௌரவிப்பில் 31பேர் பழைய மாணவர்களினால் கௌரவிக்கப்பட்டமை வரலாற்றுச்சாதனை ஆகும்.

98ம் ஆண்டு பிரிவு மாணவர்கள் கடந்த 5 வருடகாலமாக பாடசாலையின் குறைபாடுகளையும்,தேவைகளையும் அறிந்து கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட அங்கத்தவர்களை கொண்ட ஒரு அணியாகத்திரண்டு பாடசாலையின் தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றார்கள்.

அந்தவகையில் அவர்களுடைய முதலாவது நிகழ்வாக 2015ஆம் ஆண்டு பாடசாலையின் சென்றலைட் கிரிக்கெட் விளையாட்டுக் கழகத்தின் குறைபாடுகளையும் கேட்டறிந்து கிழக்கு மாகாணத்திலேயே எந்த பாடசாலையிலும் இல்லாத ஒரு பந்துவீசும் கருவியை லண்டனில் இருந்து தருவித்து வழங்கியதுடன் மெட்டனும்,கடின பந்துகளையும் வழங்கி வருடாவருடம் நடைபெறும் “பாடுமீன் சமர்” என்று அழைக்கப்படும் கிரிக்கெட் போட்டிக்கு பெரும் பங்காற்றி வருகின்றார்கள்.

தொடர்ந்தும் பாடசாலையின் பிரதான மண்டபத்தின் கதிரைகள் தேவை கருதி 202ஆவது வருட நிறைவை முன்னிட்டு 2016ஆம் ஆண்டு 202 கதிரைகள் மெதடிஸ்த மத்திய கல்லூரிக்கு வழங்கி ஏனைய பாடசாலையின் பழைய மாணவர்களையும் 98ஆம் வருட மாணவர்கள் திரும்பி பார்க்கவைத்துள்ளார்கள்.மேலும்  புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கும் ,அம்மாணவர்களை உற்சாகப்படுத்தி பரீட்சையில் சித்தியடையவைத்த ஆசிரியர்களுக்கும் நினைவுச்சின்னம்,பரிசுப்பொதி வழங்கி கௌரவித்தார்கள்.இம்மாணவர்களின் இச்செயலானது ஏனைய பாடசாலை பழைய மாணவர்களுக்கும் முன்னுதாரணமாக புடம்போட்டு காட்டுகின்றது.

Related posts