மாணவர்களின் எண்ணிக்கையைக் கொண்டு பாடசாலையின் வளங்களை நிர்ணயிக்கின்ற முறைமை வடக்கு கிழக்கிற்கு பொருத்தமற்றது… (பா.உ – த.கலையரசன்)

மாணவர்களின் எண்ணிக்கையை வைத்தே ஒரு பாடசாலையின் வளங்கள் நிர்ணயிக்கப்படுகின்ற விடயம் கிழக்கு மாகாணத்திலே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. வடக்கு கிழக்கு மாகாணங்களைப் பொருத்த மட்டில் தமிழர்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு சிரழிந்த சமூகம், தமிழர்களின் பிறப்பு வீதம் குறைக்கப்பட்டிருக்கின்றது எனவே இப்பிரதேசங்களில் மாணவர்களின் எண்ணிக்கையைக் கொண்டு பாடசாலையின் வளங்களை நிர்ணயிக்கின்ற முறைமை பொருத்தமற்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.
 
திருக்கோவில் கனகர் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
எமது திருக்கோவில் பிரதேசத்திலே பல கிராமங்கள் இன்னும் பல பிரச்சனைகளுக்கு முகங்கொடுத்துக் கொண்டே இருக்கின்றன. சுமார் 40 வருடங்களுக்கு மேலாக கனகர் கிராம மக்களுக்கான காணிப் பத்திரங்கள் இன்மை என்பது பாரிய பிரச்சனையாகக் குறிப்பிடப்படுகின்றது. அக்காலத்தில் 63 குடும்பங்களுக்குரிய பணங்கள் செலுத்தப்பட்டும் வீடமைப்பு அதிகரசபையினால் எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை என்கின்ற விடயமும், இத்தோடு சேர்ந்து பல விடயங்களும் மக்களால் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.
 
குறிப்பாக கனகர் கிராம மக்களால் முன்வைக்கப்பட்ட விடயங்கள் மிகவும் அடிப்படை விடயங்களாக இருக்கின்றன. நிச்சயமாக இந்த காணி அனுமடதிப்பத்திரம் உள்ளிட்ட விடயங்களை பிரதேச செயலாளர் மற்றும் வீடமைப்பு அதிகார சபை உத்தியோகத்தர்களுடனும் தொடர்புகளை ஏற்படுத்தி விரைவான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குரிய செயற்பாடுகளை ஆரம்பிப்பேன்.
 
அது மாத்திரமல்ல பாடசாலை விடயங்கள், மைதான விடயங்கள், மாணவர்களின் இடைவிலகல்கள் போன்ற விடயங்களும் முன்வைக்கப்பட்டன. அந்த விடயங்கள் தொடர்பில் நான் மாகாணசபையூடாகக் கையாளுகின்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பேன்.
 
எமது சமூகத்திற்கு தற்போது கல்வி என்பது மிகவும் முக்கியமான விடயமாக இருக்கின்றது. ஏனெனில் எமது பிரதேசங்களிலே தமிழர்களின் பிறப்பு வீதம் குறைக்கப்பட்டிருக்கின்றது. மாணவர்களின் எண்ணிக்கையை வைத்தே ஒரு பாடசாலையின் வளங்கள் நிர்ணயிக்கப்படுகின்ற விடயம் கிழக்கு மாகாணத்திலே ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. வடக்கு கிழக்கு மாகாணங்களைப் பொருத்த மட்டில் தமிழர்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு சிரழிந்த சமூகம், 90000 பெண்தலைமை தாங்கும் குடும்பத்தை வடக்கு கிழக்கிலே கொண்டிருக்கின்றோம். பல இளம் வயதினரை இழந்திருக்கின்றோம். அவ்வாறு இழந்த ஒரு சமூகம் தற்போது விகிதாசாரத்திலே மிகவும் இறங்கு வரிசையிலே சென்று கொண்டிருக்கின்றது. எனவே இப்பிரதேசங்களில் மாணவர்களின் எண்ணிக்கையைக் கொண்டு பாடசாலையின் வளங்களை நிர்ணயிக்கின்ற முறைமை பொருத்தமற்றதாகவே இருக்கும்.
 
இந்த நிலையில் கிழக்கு மாகாணத்தில் இருந்த கல்விப் பணிப்பாளர்கள் மாணவர்களின் தொகையை வைத்தே பாடசாலைகளுக்கு வளங்களை வழங்க வேண்டும் என்று தீர்மானிக்கின்றார்கள். நாங்கள் அதனை எதிர்க்கின்றோம். ஏனெனில் மாணவர்களின் எண்ணிக்கையைக் கொண்டு ஒரு பாடசாலையின் தரத்தைக் குறைத்துவிட முடியாது.
 
எமது மக்களால் முன்வைக்கப்படுகின்ற விடயங்கள் தொடர்பில் தற்போதைய கால சூழ்நிலையில் உத்தரவாதம் வழங்க முடியாவிட்டாலும், குறிப்பிட்ட விடயங்களையாவது எமக்காக வழங்கப்படும் நிதி ஒதுக்கீடுகள் மற்றும் புலம்பெயர் உறவுகளின் உதவிகளுடன் முன்னெடுப்பதற்கான பணிகளையும் மேற்கொள்வோம்.
 
தற்போது அரசாங்கம் போகின்ற போக்கில் மக்களுக்கான அபிவிருத்தி எந்த விதத்தில் நடைபெறும் என்பதே கேள்விக்குறியாக இருக்கின்றது. கடந்த 2020ம் ஆண்டு கல்முனை உவெஸ்லி பாடசாலை கட்டிடமொன்றிற்காக ஒதுக்கப்பட்ட நிதிக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை. இது தொடர்பில் நான் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்புகையில் பதில் அமைச்சர் இன்னுமொரு பதிலைச் சொல்லுகின்றார். இரண்டு வாரங்களுக்குள் அதற்கான உரிய பதிலைத் தருவதாகத் தெரிவித்திருந்தார். ஆனால் நிதி வேறு இடத்திற்கு மாற்றப்பட்ட விடயத்தை அமைச்சர் ஏற்றுக் கொண்டார். இவ்வாறான நிலைமைகளே கிழக்கு மாகாணத்தில் தமிழர் பிரதேசங்களில் அரசின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு இருக்கின்றது.
 
நாங்கள் கிழக்கு மாகாணத்திலே அதிகார ரீதியாகவும், அரசியல் ரீPதியாகவும் பலமிழந்த நடைமுறை இந்த நாட்டில் தொடர்ச்சியாக இருந்து கொண்டிருக்கின்றது. இதனை நாங்கள் இனிவரும் காலத்தில் அவ்வாறே விட்டு விட முடியாது. இங்கு நடக்கின்ற விடயங்கள் பெரும்பான்மை அரசியல்வாதிகளும் அறிய வேண்டும் என்பதற்காகவே நாங்கள் குரல் கொடுத்து வருகின்றோம். எமக்குப் பல விடயங்கள் அநீதிகளாக நடந்தேறியிருக்கின்றன.
 
தற்போது எமது பாடசாலைகளிலே கட்டிடப் பற்றாக்குறைகள் பல இருக்கின்றன. எமது தமிழ்ப் பாடசாலைகள் தற்போது பல சாதனைகளைப் படைத்து வருகின்றன. அது தொடர்ச்சியாக இடம்பெறும் அதில் எவ்வித சந்தேகமும் இல்லை. எனவே அதற்கு நாங்கள் ஒற்றுமையாக இருந்து செயற்பட வேண்டும்.
 
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினைப் பொருத்த வரையில் நாங்கள் எமது தமிழ் மக்களின் இருப்பு சம்மந்தமாக நீண்டகால போராட்டத்தை முன்னெடுத்திருந்தாலும், தற்காலத்தில் எமது மக்களின் தேவை கருதியும் செயற்பட்டு வருகின்றோம். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சுமை யுத்தத்தால் பாதிக்கப்பட்டு அழிவுற்றுள்ள எமது மக்களுக்கே பாரிய சுமையாக இருக்கின்றது. தமிழ் மக்களுக்கு இவ்வாறான நிலைமைகள் எல்லாம் இருக்கின்றது என்பதை அரசாங்கம் அறியுமா என்பதும் ஒரு கேள்விதான். இந்த விடயங்களை உரிய இடங்களுக்கு நாங்கள் கொண்டு செல்ல வேண்டும்.
 
இந்த நிலைமையை மாற்ற வேண்டும். எமது மக்களின் விடயங்களை ஒன்றன்பின் ஒன்றாக நடைமுறைப்படுத்துவதற்குரிய சில பணிகளை நாங்கள் செய்வோம். இருப்பினும் எல்லாவற்;றிற்கும் மேலாக எமது சமூகத்திற்குள்ளே ஒற்றுமை இன்மை என்பது மிகவும் வேதனையான விடயம். அதனை முதலில் மாற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.

Related posts