முடக்கப்பட்ட கல்முனைப்பகுதிக்குள் வியாபாரம் செய்யவிருக்கும் வியாபாரிகளுக்கு மழைக்குள் வீதியில் அன்ரிஜன் சோதனை:10பேருக்கும் நெகடிவ்

கொரோனாப்பரவல் காரணமாக முடக்கப்பட்ட கல்முனைப்பிரதேசத்துள் உணவுப்பொருட்களை கொண்டுசென்று விற்பனை செய்யவிருக்கும் வியாபாரிகளுக்கான அன்ரிஜன் சோதனை கொட்டும் மழைக்குமத்தியில்(4)திங்கட்கிழமை காலை  நடைபெற்றது.
 
கல்முனை.1 இலுள்ள மாநகரசபைநிருவாகத்தின்கீழுள்ள ஆயுர்வேத வைத்தியசாலையில் இவ் அன்ரிஜன் சோதனை செய்யப்படுமென்று கூறப்பட்டபோதிலும் வைத்தியசாலை உரியவேளைக்குத் திறக்கப்படாமையினால் வீதியில் வைத்து அன்ரிஜன் சோதனை செய்யநேரிட்டது.
 
வைத்தியர்களும் பொதுச்சுகாதாரபரிசோதகர்களும் வீதியில் நின்று வியாபாரிகளுக்கு கொரோனாச் சோதனை செய்யவேண்டிய துர்ப்பாக்கியநிலை ஏற்பட்டது. மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜனும் அங்கு நின்றிருந்தார்.
 
வீதியோரத்தில் குடையைப்பிடித்தவண்ணம் கல்முனை மாநகரசபை பிரதம சுகாதார வைத்தியஅதிகாரி அர்சாத் காரியப்பரின் வழிகாட்டலி;ல் கல்முனைவடக்கு சுகாதாரவைத்திய அதிகாரி டாக்டர் ஆர்.கணேஸ்வரன் தலைமையிலான சிரேஸ்ட பொதுச்சுகாதார பரிசோதகர் பி.எம்.எம்.தஸ்றீன் பொதுச்சுகாதார பரிசோதகர் சா.வேல்முருகு ஆகியோர் இச்சோதனையி;;ல் ஈடுபட்டனர்.
 
கல்முனைவடக்கு பிரதேசத்திற்குட்பட்ட 07கிராமசேவையாளர் பிரிவுகளுள் வியாபாரம் செய்யவிருக்கும் 10வியாபாரிகளுக்கு சோதனை செய்யப்பட்டதில் எவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை. ஆதலால் (5) முதல் இவ்வியாபாரிகள் முடக்கப்பட்ட பகுதிகளில் உணவுப்பொருட்களை சுகாதார நடைமுறைக்கமைவாக விற்பனை செய்யவிருக்கின்றனர்.
 
சோதனை வியாபாரிகள் 10பேருக்கும் செய்துமுடியும் தருணத்தில் வைத்தியசாலை ஊழியர் வந்து வைத்தியசாலையைத் திறந்தார்.
 
அங்குநின்றிருந்த த.தே.கூட்டமைப்பின் மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் கருத்துரைக்கையில்:
 
உரியவேளைக்கு மாநகரசபைக்குட்பட்ட ஆயுர்வேத வைத்தியசாலை திறக்கப்படாமையினால் கொட்டும் மழைக்கு மத்தியில் வைத்தியர்கள் வீதியில்வைத்து இவ் அன்ரிஜன் சோதனையை மேற்கொள்ள நேரிட்டது.வைத்தியர்கள் வந்து வீதியில் நெடுநேரமாக காத்திருந்தும் திறக்கப்படவில்லை. இது மாநகரசபையின் பொடுபோக்குத்தன்மையை வெளிக்காட்டுகிறது.என்றார்.

Related posts