முதலமைச்சரின் மனக்குழப்பத்திலான பேச்சுகளுக்கு கூட்டமைப்பு பொறுப்பேற்காது – சுமந்திரன்

வடக்கு மாகாண முதலமைச்சர் மன குழப்பம் அடைந்து பல கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் அதற்கு கூட்டமைப்பு ஒரு போதும் பொறுப்பேற்காது என கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்விடயத்தை கூறினார்.

அவர் அங்கு குறிப்பிடுகையில், “அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்பது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுதியான தீர்மானம் எதனையும் இதுவரை எடுக்கவில்லை. நேற்று முதலமைச்சர் உரையாற்றும்போது தன் முன் 3 தெரிவுகள் முன்னர் இருந்ததாகவும்,
தற்போது 4 தெரிவுகள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
ஆகவே நாட்கள் செல்லச் செல்ல தெரிவுகளின் எண்ணிக்கை உயரும் வாய்ப்புக்கள் உள்ளது. அவருடைய மனக்குழப்பங்களுக்கு நாங்கள் பொறுப்பாளிகள் அல்ல. அவர் தனது மனக்குழப்பம் தெளிந்து தெளிவான ஒரு தெரிவினை கூறியதன் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும்.
நாடாளுமன்றத் தேர்தல் காலத்தில் முதலமைச்சர் தான் சார்ந்த கட்சிக்கு எதிராக செயற்பட்டதனை வெளிப்படையாக கண்டித்தவன் நான். அப்போது நான் பேசியது தவறு என கூறியவர்கள் இப்போது நான் கூறியது அனைத்தும் சரியென கூறுகிறார்கள். மாகாணசபைத் தேர்தல் காலத்தில் தான் போட்டியிடும் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு வாக்களியுங்கள் என கேட்ட முதலமைச்சர் நாடாளுமன்றத் தேர்தலில் வீட்டைவிட்டு வெளியேறி வாக்களியுங்கள் என கூறினார். அவர் இனியும் கட்சிக்குள் இருப்பதற்கு தகுதியற்றவர். எனவே தமிழ் மக்களுடைய சுயமரியாதைக்காக போராடும் கட்சி தனது சுயமரியாதையை இழக்கமுடியாது” என்று குறிப்பிட்டார்.

Related posts