முன்னாள் போராளிகளுக்கு இழப்பீடு வழங்கும் விவகாரம்: ஐ.தே.க. விளக்கம்

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச உள்ளிட்டோர், பயங்கரவாதிகளுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் முற்படுவதாக தெரிவித்திருந்தனர். ஆனால்  கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைவாகவே அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் முன்னாள் போராளிகளுக்கு இழப்பீடு வழங்கும் அமைச்சரவை பத்திரத்தை முன்வைத்தார் என்று ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான முஜூபூர் ரஹ்மான் இவ்வாறு கூறினார்.

முன்னாள் போராளிகள் உள்ளிட்ட போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடுகளை வழங்குவது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை அமைச்சர் சுவாமிநாதன் அண்மையில் சமர்ப்பித்திருந்தார். இந்நிலையில், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச உள்ளிட்ட சிலர், பயங்கரவாதிகளுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் முற்படுவதாக தெரிவித்து வருகின்றனர்.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அவர் விளக்கமளிக்கையில், “அமைச்சர் சுவாமிநாதன் சமர்ப்பித்த பத்திரத்தை அமைச்சரவை நிராகரிக்கவில்லை. மேலும், புலிகள் இயக்கத்துடன் தொடர்புகளைப் பேணிய குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற அமைச்சரவை பத்திரத்தையும் அவர் சமர்ப்பிக்கவில்லை,

மாறாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமித்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளையே அவர் மையப்படுத்தி அந்தப் பத்திரத்தை தாக்கல் செய்திருந்தார்.

குறிப்பாக பாதிக்கப்பட்ட அனைவரும் சமமான முறையில் இழப்பீடு வழங்க வேண்டும் என்பதை எல்.எல்.ஆர்.சி ஆணைக்குழு பரித்துரைத்துள்ளது. அதில் என்ன தவறு உள்ளது? அப்படியானால் விமல் வீரவன்ச அன்றே அதனைத் தவறு என்று கூறியிருக்கலாம். அதனைவிடுத்து தற்போது கூறுவதை ஏற்க முடியாது.

முன்னர் புனர்வாழ்வு பெற்ற அவர் தற்போது இளைஞர்களின் புனர்வாழ்வை மறுக்கின்றார். அவரின் எண்ணத்தை போன்று வடக்கிலும் பலர் உள்ளனர். அதில் குறிப்பாக விக்னேஸ்வரன், சிவாஜிலிங்கம் போன்றோரின் மனோ நிலையைக் குறிப்பிடலாம்” என்று அவர் தெரிவித்தார்.

இதேவேளை, குறித்த அமைச்சரவைப் பத்திரம் நிராகரிக்கப்பட்டு வருகின்றமை தொடர்பில் அண்மையில் கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்வில் வடக்கு முதல்வர் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts