முஸ்லிம் ஜனாஸாக்களை எரிப்பது யாராக இருந்தாலும் போராட்டம் தொடரும்

கொரோனா வைரஸ் தாக்கிய முஸ்லிம் ஜனாஸாக்களை அரசினால் அடக்கம் செய்ய முடியாவிட்டால் எங்களிடம் தாருங்கள் என்பதை அழுத்தமாக கூற விரும்புகிறேன். நீங்கள் கூறப்போகும் உயிரியல் காரணங்களை ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாரில்லை. முஸ்லிம் ஜனாஸாக்களை வைத்து அரசியல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். பள்ளிகளை உடைக்க வைத்து வாக்கு சேகரிக்க முயன்றதை போன்று இதையும் வைத்து வாக்கு சேகரிக்க முயலாமல் நாட்டினதும், முஸ்லிங்களினதும் நிலை கருதி இறைபக்தியுடன் செயற்படுங்கள் என தேசிய காங்கிரசின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா கேட்டுக்கொண்டார்.
 
கிழக்குவாசலில் நேற்று (08) நடைபெற்ற அரசியல் கலந்துரையாடலில் கலந்து கொண்டு பேசிய அவர் முஸ்லிங்களின் ஜனாஸா எரிப்பு விடயங்கள் பற்றி கடும்தொனியில் பேசினார். தொடர்ந்த அவரது பேச்சில்,  
 
இலங்கையில் வாழ்ந்த,வாழ்ந்துகொண்டிருக்கின்ற முஸ்லிங்களுக்கு காலத்திற்கு காலம் எழுகின்ற பிரச்சினைகள் தொடர்பில் ஆழமாக நோக்கப்பட்டு  கடந்தகாலங்களில் இருந்த தலைவர்கள் அதனை தீர்த்துவைத்துள்ளார்கள்.  கடந்த காலங்களில் நடைபெற்ற இனக்கலவரங்களின் போதும் எமது தலைவர்கள் சரியான தீர்வுகளை பெற்றுத்தந்துள்ளார்கள். துரதிஷ்டவசமாக தலைவர் அஷ்ரபின் இழப்பு பின்னர் முஸ்லிங்களுக்கு சரியான தலைமைகள் கிட்டவில்லை. அது முஸ்லிங்களுக்கு மட்டுமல்ல இந்த நாட்டுக்கும் பாரிய இழப்பாகும். இப்போது இருக்கின்றவர்கள் சமூகத்தின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பற்றி சிந்திப்பதை விட அடுத்த தேர்தலுக்கு எதை முன்னிறுத்தலாம் என்பதை பற்றியே சிந்திக்கிறார்கள்.
 
சிங்கள, தமிழ் மக்களும் கூட இப்போது வாக்கு எடுக்கும் அரசியலுக்காக இனவாதத்தை கையில் எடுத்ததனால்  மரணங்களின் பின்னர் நல்லடக்கம் செய்வதா? புதைப்பதா? அல்லது மரணித்தவரின் ஆசையாக எது இருந்தது என்பன பற்றியெல்லாம் அக்கரைகொள்ளாது அதற்கும் இப்போது சாவுமணி அடித்துள்ளார்கள். உலகம் முழுவதும் கொரோனாவின் தொற்று உள்ளது. அங்கும் மரணத்தின் பின்னர் எரித்தல் அல்லது  நல்லடக்கம் செய்தல் என்பன இலகுவான ஒன்றாகவே நோக்கப்பட்டது. உலக சுகாதார ஸ்தாபனம், சர்வதேச நாடுகள் எல்லாம் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் இறுதிக்கிரிகைகளை இலகுபடுத்தியுள்ளது. ஆனால் இலங்கை தவிர.
 
இந்தியாவிலும் அது இலகுவாக்கப்பட்டிருந்தாலும் இலங்கையில் உயிரிழந்தவர்களின் இறுதிக்கிரிகைகள்  அரசியலிலும், இனவாதத்திலும், தேர்தலிலும் பின்னி பிணைக்கப்பட்டுள்ளது. முஸ்லிங்களா அதை எரிக்க வேண்டும் எனும் பார்வைக்கு கொண்டுவருவதற்க்கு நமது அணுகுமுறைகளும் நமது தலைவர்களும் பிழை விட்டிருக்கிறார்கள் என்பது எனது பார்வை. என் மீதும் அந்த கடமை இருக்கிறது. முஸ்லிங்களுடைய பிரச்சினை சாம்பலை அடக்குவதா என்பதல்ல. முஸ்லிங்களை பொறுத்தவகையில் இது சமூக கடமை.
 
ஒரு முஸ்லிம் மரணித்தால் குளிப்பாட்டுவது, கப்பனிடுவது, தொழுகை நடாத்துவது, நல்லடக்கம் செய்வது உலகில் உள்ள எல்லா முஸ்லிங்களுக்கும் கடமையான ஒன்று. ஏன் முஸ்லிம் ஜனாஸாக்களை எரிக்க முற்படுகிறார்கள் என்பதை அறிய சில வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற அரசின் முக்கிய பிரமுகர்கள், அரச உயரதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டம் ஒன்றில் சுகாதார பணிப்பாளர் நாயகத்தை நோக்கி கேள்வியை முன்வைத்தேன். சர்வதேச நியதிகள் ஒருவாறு இருக்க ஏன் நாம் அதை பற்றி சிந்திக்காமல் இருக்கிறோம். ஒருவரின் இறுதி சடங்கு கூட திருப்தியில்லாமல் அமைவது மனிதாபிமானத்திற்க்கு எதிரான ஒன்றாக  உணரமுடிகிறது. முஸ்லிம் ஜனாஸாக்களை எங்களிடம் தாருங்கள். நாங்கள் பாதுகாப்பாக நல்லடக்கம் செய்கிறோம். அதற்கான இடம் இருக்கிறது என்று கேட்டேன்.
 
அந்த கேள்வியை முன்வைத்த போது உயிரியல் ரீதியாக ஒரு சந்தேகம் இருந்தது. மரணித்த உடலில் இருந்து கொரோனா வைரஸ் வெளியேறுமா என்ற சந்தேகமே அது. சாதாரணமாக அப்படி நடக்க வாய்ப்பில்லை என்று தெரிந்தாலும் கூட உயிரியல் ஆராய்ச்சி என்ன சொல்கிறது என அறிய விரும்பினேன். அப்போது அங்கிருந்தவர்கள் கொரோனா தோற்று அற்ற சாதாரண ஜனாஸாக்களை நாங்கள் எரிக்க முற்படவில்லை. கொரோனா தோற்றுக்கு உள்ளான ஜனாஸாக்களை மட்டுமே ஏரிக்கிறோம். அதற்கு ஏன் முஸ்லிங்கள் ஒத்துழைக்க முடியாது என்று கேட்டார்கள். அப்போது அதற்கு பதிலளிக்கும் பதில்கள் என்னிடமிருக்கவில்லை.
 
 மரணித்த உடலில் இருந்து கொரோனா வைரஸ் வெளியேறுமா என்பது பற்றி உயிரியல் ஆராய்ச்சி என்ன சொல்கிறது என்பதை அறிந்த பின்னர் பேச நினைத்து அங்கிருந்து வந்துவிட்டேன். பின்னர் பிரித்தானியா போன்ற நாடுகளின் மருத்துவ வல்லுநர்கள், நமது நாட்டின் மருத்துவர்கள் மரணித்த உடலில் இருந்து கொரோனா வைரஸ் வெளியேறாது என்பதை அறிவித்திருந்தனர். சம்பந்தப்பட்ட தரப்பினருடன் இலங்கையின் பல்வேறு இனங்களையும் சேர்ந்த மருத்துவர்கள் விவாதம் செய்த போது மரணித்த உடல்களை அடக்கம்செய்ய முடியும் ஆனால் மக்கள் இதை வேறுவிதமாக நோக்குகிறார்கள், மக்கள் கொந்தளிப்பார்கள் இதனால் இவ்விடயத்தில் விட்டுக்கொடுக்க வேண்டும்  என்று கேட்டுக்கொண்டதை அவர்கள் கேட்டுக்கொண்டு வரவேண்டி இருந்தது.
 
மக்களை கேடயமாக வைத்து மக்கள் குழப்புகிறார்கள் என்கிறார்கள். அவர்கள் யார் என்று நோக்கினால் அரசியல்வாதிகளே பின்னால் இருக்கிறார்கள். அவர்களே மக்களை பிழையாக வழிநடாத்துகிறார்கள். எமது நாட்டின் சுகாதார அமைச்சு, சுகாதார திணைக்களம், சுகாதார-மருத்துவ அதிகாரிகள், பேராசிரியர்கள் முன்வந்து மக்களுக்கு உண்மைகளை விளக்கினால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றால் அதற்கு அரசியல் கட்சிகள் தடையாக இருந்தால் நாம் அதை கண்டித்தே ஆகவேண்டும்.
 
 முன்னாள் அமைச்சர் ராஜிதாவினால் உருவாக்கப்பட்ட இனவாத சிந்தனைகள் கொண்ட, முஸ்லிங்களை தொடர்ந்தும் வஞ்சிக்கும் மருத்துவ குழுவை கொண்டு இந்த நாட்டின் அரசுக்கு எதிராக தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களை திருப்பும் செயற்பாடுகளை அரங்கேற்றும் மருத்துவ குழுவினர் அவர்களின் வேலையை செய்கிறார்களா என சுகாதார அமைச்சர் பவித்திரா தேவி வன்னியாராச்சி அவர்களிடம் கேட்க விரும்புகிறேன்.
மேலும் உங்களின் கீழ் உள்ள செயலாளர்கள், மருத்துவ பணிப்பாளர்கள், மருத்துவர்கள் எல்லோரும்  மரணித்த உடலில் இருந்து கொரோனா வைரஸ் வெளியேறாது என்பதை உங்களுக்கு அறிவித்தால் ஒரு அமைச்சராக இருக்கும் நீங்கள் ஏன் அதை மக்களுக்கு அறிவிக்காமல் ஒரு குழு எடுக்கும் தீர்மானங்களுக்கு தலையசைக்கிரீர்கள். இன்று அந்த குழுவுக்குள்ளையே பிளவுகள் ஏற்பட்டு விட்டன.
 
வேன்றுமென்றே ஏரிக்க வேண்டும் என்று அரசியல் செய்ய முற்பட்டதால் இன்று இறைவன் அவர்களுக்கு அதன் விளைவை காட்டியுள்ளான். கொரோனா வைரஸ் தாக்காத ஒரு தாயை எரிக்கும் அவலநிலை அரங்கேறியுள்ளது.  கொரோனா வைரஸ் தாக்காத ஒரு தாயை எரிக்க வேண்டிய அவசர நிலை, மனிதாபிமானமில்லா நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழரோ, சிங்களவரோ, அமைச்சரோ, பிரதமர் மஹிந்தவோ, ஜனாதிபதி கோத்தாவோ இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது மனிததர்மத்துக்கு எதிரானது. இது மார்க்க விழுமியங்களுக்கு அப்பாற்பட்டது.
 
கொரோனா வைரஸ் தாக்கிய முஸ்லிம் ஜனாஸாக்களை அரசினால் அடக்கம் செய்ய முடியாவிட்டால் எங்களிடம் தாருங்கள் என்பதை அழுத்தமாக கூற விரும்புகிறேன். நீங்கள் கூறப்போகும் உயிரியல் காரணங்களை ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாரில்லை. முஸ்லிம் ஜனாஸாக்களை வைத்து அரசியல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். 
 
பள்ளிகளை உடைக்க வைத்து வாக்கு சேகரிக்க முயன்றதை போன்று இதையும் வைத்து வாக்கு சேகரிக்க முயலாமல் நாட்டினதும், முஸ்லிங்களினதும் நிலை கருதி இறைபக்தியுடன் செயற்படுங்கள். நாங்கள் போராடுவோம் எங்களின் ஜனாஸாக்களை அவர்கள் தந்தே ஆக வேண்டும். நீதிமன்ற நடவடிக்கைகள், வழக்குத்தாக்கல்களையும் தாண்டி இயற்கையிலையே கிடைத்த வளங்களை கொண்டு எங்களின் உரிமைக்காக போராடுவோம். இது சமூகத்தின் கூட்டுப்பொறுப்பு. இந்த எரிப்பு விடயத்தை ஏற்று கொள்ள முடியாது- என்றார். 

Related posts