யானைக்காவலுக்குச்சென்ற விவசாயி யானைதாக்கி மரணம்!

யானைக்காவலுக்குச் சென்ற இளம் விவசாயி யானையால் தாக்கப்பட்டு மரணமானார்.
இச்சம்பவம் நேற்று இரவு 8மணியளவில் அம்பாறையையடுத்துள்ள வளத்தாப்பிட்டியில் இடம்பெற்றுள்ளது.
 
யானைதாக்கிப் பலியானவர் வளத்தாப்பிட்டியைச்சேர்ந்த 42வயதுடைய இளம்குடும்பஸ்தரான விவசாயி மயில்வாகனம் யோகராசா என்பவராவார்.
 
சம்பவம் பற்றி அறியவருவதாவது:
 
இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் சம்பவதினம் இரவு யானைக்காவலுக்குச் சென்றிருக்கிறார். இவருடன் இன்னும் பலர் வேறு வேறு இடங்களில் காவலில் ஈடுபட்டார்கள். வேளாண்மை அறுவடைக்காலமென்பதால் விவசாயக்குழுவால் யானைக்காவலுக்கென அமர்த்தப்பட்டவர்கள் இவர்கள்.
அங்கு இரவு 8மணியளவில் வந்த தனியன் யானையை விரட்டியவாறு இவர் பின்னே சென்றிருக்கிறார். ஒரு கட்டத்தில் திடிரென திரும்பிய யானை அவரைத்துரத்தி அடித்துக்கொன்றிருக்கிறது.
 
ஏனையோர் மற்றுமொரு யானைக்கூட்டத்தை விரட்டிச்சென்றிருக்கிறார்கள். அனைவரும் திரும்பிவந்தபோது இவரை மட்டும் காணவில்லை. அவர்கள் இவரைத்தேடி அந்த வட்டைபூராக இருமணிநரம் அலைந்திருக்கிறார்கள்.
அப்போது ஓரிடத்தில் டோர்ச்லைற் எரிவதைக்கண்ணுற்ற அவர்கள் அருகில் சென்றதும் குறித்த நபர் இறந்துகிடக்கக்காணப்பட்டார்.
 
பின்னர் உறவினரிடம்கூறி பொலிசாரும் வந்து இரவு 10மணியளவில் அம்பாறை வைத்தியசாலைக்கு பிரேதம் அனுப்பிவைக்கப்பட்டது. நேற்று(23) நண்பகல் வரை பிரேதபரிசோதனை மரணவிசாரணைக்காக பிரேதம் வைத்தியசாலையிலேயே வைக்கப்பட்டிருந்தது.
 
மேலதிக விசாரணையை சம்மாந்துறைப்பொலிசார் மேற்கொண்டுவருகிறார்கள்.

Related posts