யுத்த குற்றம் குறித்து தன்னுடன் பேச இனி எவருக்கும் அனுமதி இல்லை என்கிறார் ஜனாதிபதி!

ஐ.நா தீர்மானம் மற்றும் போர்க்குற்ற விவகாரம் தொடர்பாக உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ எவரும் தன்னுடன் பேச அனுமதி வழங்காமல் இருக்க தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஐ.நா. தீர்மானம் குறித்து வெளிநாட்டு ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதில் வழங்கும்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இனிமேல் எந்தத் தீர்மானமும் இலங்கை மீது நிறைவேற்றப்பட்டாலும் அதனை ஏற்க நான் தயாராக இல்லை.

ஏற்கனவே இலங்கை மீது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் ஆயுள் நிறைவடைகின்றன. அவை தொடர்பாக இனிப் பேசிப் பயன் இல்லை.

ஐ.நா. தீர்மானத்தை வைத்துக்கொண்டு இராணுவத்தைத் தண்டிக்க ஒருபோதும் இடமளியேன். எமது இராணுவத்தினரிடம் எவரும் நெருங்க முடியாது. அவர்களைத் தொடவே முடியாது.

இனிமேல் ஐ.நா. தீர்மானம் மற்றும் போர்க்குற்ற விவகாரம் தொடர்பாக உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ எவரும் என்னுடன் பேச அனுமதி வழங்காமல் இருக்க உத்தேசித்துள்ளேன்.

இந்த விவகாரத்தை அப்படியே மூடிவைத்து விட வேண்டும். நாட்டை நல்லிணக்கப் பாதையில் கொண்டுசெல்ல அனைவரும் முயற்சிக்க வேண்டும்.

மூவின மக்களும் இந்த நாட்டில் நிம்மதிப் பெருமூச்சுடன் வாழும் நிலைமையை ஏற்படுத்த நான் அயராது பாடுகின்றேன். ஆனால், இலங்கையிலுள்ள சில துரோகிகள் எமது நாட்டை சர்வதேச சமூகத்திடம் காட்டிக்கொடுக்கின்றனர். இவர்களுக்கு நாட்டு மக்களே தக்க பாடம் புகட்டுவார்கள்.

உள்நாட்டு அபிவிருத்திகளில் கவனம் செலுத்தாத சில விஷமிகள் சர்வதேச சக்திகளிடம் அடிபணிகின்றார்கள். காலம் இவர்களுக்குப் பதிலைச் சொல்லும்” என குறிப்பிட்டுள்ளார்.

Related posts