ரீட்சைப்பெறுபேற்றில் கிழக்குமாகாணம் திடீர்ப்பாய்ச்சல் 9ஆம் இடத்திலிருந்து 4ஆம் இடத்திற்கு அசுரவேகத்தில் முன்னேறியது!

இறுதியாக நடைபெற்ற 2019 க.பொ.த. உயர்தரப்பரீட்சைப் பெறுபேற்றினடிப்படையில் கிழக்குமாகாணம் திடீர்ப்பாய்ச்சலை மேற்கொண்டு கல்வித்தரத்தில் நான்காம் இடத்தைக்கைப்பற்றியுள்ளது.
இறுதியாக நடாத்தப்பட்ட ஆய்வில் 9ஆம் இடத்தில் இருந்த கிழக்கு மாகாணம் இம்முறை இவ்வாறு அசுரவேகத்தில் 4ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
 
கல்வியமைச்சு நடந்துமுடிந்த 2019 க.பொ.த.உயர்தரப்பரீட்சைப் பெறுபேற்றை பாடரீதியிலும் துறைசார்ந்த ரீதியிலும் பகுப்பாய்வு செய்து அதன் அறிக்கையை நேற்று வெளியிட்டிருந்தது.
அதன்படி கடந்த காலங்களில் 9ஆம் இடத்திலிருந்த கிழக்குமாகாணம் அசுரவேகத்தில் முன்னேறி 4ஆம் இடத்தைக் கைப்பற்றியுள்ளது.
 
இச்சாதனையை நிகழ்த்தியமைக்காக கிழக்கு கல்விச்சமுகம் அதற்காக கூடுதல் கவனமெடுத்து பல செயற்றிட்டங்களை பாடசாலைகளில் அறிமுகப்படுத்தி பெறுபேறுகளை பகுப்பாய்வு செய்து ‘இசட்’ ஸ்கோர்களை வெளியிட்டு ஆசிரியர்களையும் மாணவர்களையும் ஊக்கப்படுத்திய கிழக்கு மாகாணக்கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் அவர்களைப் பாராட்டியுள்ளது.
 
இலங்கை கல்விநிருவாகசேவையின் முதலாந்தர அதிகாரி முதுகல்விமாணி மற்றும் விஞ்ஞானப்பட்டதாரியான அவருடன் கூடவே இணைந்து பணியாற்றிய கல்விப்பணிப்பாளர்கள் கல்விஅதிகாரிகளையும் அதிபர் ஆசிரியர்களையும் கல்விச்சமுகம் பாராட்டியுள்ளது.
அதேவேளை மாகாணக்கல்விப்பணிப்பாளர் மன்சூர் இந்த முன்னேற்றத்திற்கு ஒத்துழைத்த அனைவருக்கும் தமது மனமார்ந்த நன்றிகளைத்தெரிவித்துள்ளார்.
 
3பாடங்களிலும் சித்திபெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களின் வீதத்தை அடிப்படையாகவைத்து இந்த நிலைகள் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி கிழக்கு மாகாணத்தில் இம்முறை 12018மாணவர்கள் தோற்றியிருந்தனர். அவர்களுள் 7433பேர் பல்கைலைக்கழகத்திற்குத் தெரிவாகியுள்ளனாஇது 61.85வீதமாகும். இது இலங்கையிலுள்ள 9 மாகாணங்களில் 4வது இடத்திலுள்ளது.இவர்களில் 238பேர் சகலபாடங்களில் 3ஏ சித்திபெற்றுச்சாதனை படைத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
மேலும் உயர்தர துறைசார் ரீதியில் 9மாகாணங்களுடன் ஒப்பிட்டு நோக்குகையில் உயிரியல் விஞ்ஞானத்துறையில் 3ஆம் இடத்தையும் பௌதீகவிஞ்ஞானத்துறையில் 4வது இடத்தையும் வர்த்தகத்துறையில் 3வது இடத்தையும் கலைத்துறையில் 5வது இடத்தையும் ஏனைய துறைகளில் 1வது இடத்தையும் அடைந்துள்ளது.

 

Related posts