வடக்கில் நுண்கடன் திட்டங்கள் ஒரு சாபக்கேடு : தற்கொலை செய்துகொள்ளும் அப்பாவி தமிழர்கள்!!

தமிழ் சகோதரர்கள் செறிவாக வாழும் பிரதேசங்களில் அண்மைக்காலமாக தற்கொலைகள் அதிகரித்துள்ளமை பெரும் கவலைக்குரிய விடயமாகும் என்று பேராசிரியர் எஸ். எல். றியாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தேசிய ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் பேராசிரியர் எஸ்.எல். றியாஸ் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதில் தொடர்ந்து குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வடக்கில் முன்னாள் போராளிகளாக இருந்தவர்கள் வாழ்வாதாரத்துக்கு வழியின்றி தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் கிழக்கில் நுண்கடன் திட்டங்கள் அப்பாவித் தமிழர்களை தற்கொலை வரை தள்ளிச் செல்லும் அவலம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

இதன் சமீபத்திய நிகழ்வாக நேற்று மாலை மட்டக்களப்பின் மாவடிவேம்பு பிரதேசத்தில் ஒரு இளம் குடும்பஸ்தர் தற்கொலை செய்து கொண்டிருந்தார்.

செங்கல்வாடியில் கூலிக்கு கல்அறுக்கும் மாவடிவேம்பு சம்பர் வீதியை சேர்ந்த மேகராசா யோகராசா (26) இரு பிள்ளைகளின் தந்தை ஏற்கனவே 3 நிறுவனங்களில் நுண்கடன் பெற்றநிலையில் மற்றுமொரு நுண்கடன் பெற கூட்டாக மூன்றுபேர் சேர்ந்தால்தான் கடன் கொடுப்பதாக நுண்கடன் நிறுவனங்களில் கொள்கையும் பெரிய வலைப்பின்னல் எல்லோரையும் கடனாளியாக்கும் திட்டத்திற்கு அமைய தமது மனைவியை கட்டாயப்படுத்த அவர் மறுப்பு தெரிவிக்க நேற்று மாலை தூக்கிட்டு பெறுமதிமிக்க உயிரைமாய்த்துள்ளார்.

ஏற்கனவே இவர் கூலித்தொலியாளியாக இருந்து மாதம் 36ஆயிரம் ரூபா கடன் நிறுவனங்களுக்கு செலுத்திவந்துள்ளார்.

நிரந்தர தொழில் இல்லாத இவ் ஏழைக்கு ஆசை வார்த்தைகளை காட்டி கடன் பெற தேசிய அடையாள அட்டை பிறப்பு சான்றிதழ் பிரதிகள் மற்றும் மூன்றுபேர் ஒருமித்த நிலையில் ஒப்பமிட்டால் நுண்கடன் வழங்கப்படும் என்று ஆசை காட்டி அந்த ஆசை நிராசையான நிலையிலேயே அவரின் தற்கொலை நிகழ்வு நடைபெற்றுள்ளது.

ஆரம்பத்தில் நுண்கடன் வழங்குவதற்கு பிணையாளிகளாக இரு அரச உத்தியோகத்தர்களை எதிர்பார்த்தார்கள் இதன் காரணமாக பல அரச உத்தியோகத்தர்கள் பிணையாளியாகப் போய் கடைசில் தன்னுடைய மாத சம்பளத்தை இழந்து நீதிமன்றில் அலைந்ததால் அவற்றை கருத்தில் கொண்டு கடன்பெறுபவருக்கு பிணையாளியாக முன்னிற்கும் மனப்பான்மை அற்றவர்களாக மாறிப்போனார்கள்.

இதனால் நுண்கடன் நிறுவனங்களின் மாயவலையில் விழும் அப்பாவிகள் எண்ணிக்கை வீழ்ச்சியடையத் தொடங்கியதும் நிறுவனங்களின் வருவாய் குறையத் தொடங்கியது.

இதன் பின்னர் பணத்திற்காக பிணத்தை பெறும் நிறுவனங்கள் தங்கள் சட்டதிட்டத்தை மிகவும் குறைத்து ஒவ்வொருவரிடம் எளிதாக கைவசம் கிடைக்கூடிய அடையாள அட்டை, பிறப்பு அத்தாட்சி பத்திர பிரதிகளையும் வாங்கி கடனை உடனடியாக கொடுக்கின்றார்கள்.

இதனால் கடன் பெறும் கிராமப் புற அப்பாவி ஏழைகள் நிறுவனங்களை நோக்கி படையெடுப்பது அதிகரித்துள்ளது. அதிலும் செங்கலடி பிரதேசபகுதி கிராமங்களில் தேடிதேடி நுண்கடனை கொடுத்து பல ஆயிரம் குடும்பங்களை நடுத்தெருவிற்கு கொண்டு வந்துள்ளனர்.

இரு மாதம் முன் இறந்த வந்தாறு மூலையைச் சேர்ந்த 19 வயது பிரதீபா என்ற பெண்ணின் வயதையும் தொழிலையும் பார்க்காமல் 10 இலட்சம் மேல் கடன் கொடுத்திருந்தார்கள் என்ற தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது.

கடன்பெறும் இளம் வயது ஆண், பெண்ளை கண்டபடி திட்டினால் ஒன்று தம்முடைய காதில் கையில் இருக்கும் ஆபரணத்தை விற்று கடன் கட்டுவார்கள் அல்லது அதற்கு மேல போனால் தூக்குதான் ஒரே வழி.

மட்டக்களப்பில் இப்படித்தான் நுண்கடன் நிறுவனங்கள் தமிழ்சமூகத்தின் இளம் பரம்பரையை எமனுக்கு பலிகொடுத்துக்கொண்டிருக்கின்றார்கள்.

ஏலவே மூன்று தசாப்த யுத்தம் காரணமாக அனைத்தையும் இழந்து நிர்க்கதி நிற்கும் நிலையில் வாழும் மக்கள் தங்கள் பொருளாதார பிரச்சினைகளை தீர்க்க வேறு வழியின்றி நுண் கடன் நிறுவனங்களை நாடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

அவர்களின் வாக்குகளைக்கொண்டு மக்கள் மன்றங்களுக்குத் தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாகாண சபை உறுப்பினர்களும் தங்கள் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து சுயதொழில் கடன்களை வழங்கி தாம் பிரநிதித்துவம் செய்யும் மக்களின் வறுமையைப்போக்கலாம் என்பதை அறியாமல் நடந்துகொள்வதன் காரணமாக நட்டாற்றில் விடப்பட்ட அப்பாவி மக்கள் நுண்கடன் நிறுவனங்களின் வாசற்படி நாடி மரண சாசனங்களில் கைச்சாத்திட்டு கடன்பெறத் துணிகின்றார்கள்.

கடைசியில் அதனைத் திருப்பிச்செலுத்த முடியாது தற்கொலையை யும் நாடி உயிரை மாய்த்துக்கொள்கின்றார்கள். எனவே இவ்வாறான நிலையில் இனியும் தமிழ் மக்கள் தங்கள் அரசியல் பிரதிநிதிகளை நம்பிக்கொண்டிருப்பதில் பலன் கிடைக்கப்போ வதில்லை.

அதற்குப் பதிலாக அவ்வப் பிரதேசங்களின் இளைஞர்கள் முன்வந்து இவ்வாறான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முன்வரவேண்டும்.

உங்கள் பகுதியில் உள்ள விளையாட்டு கழங்கள் ஊடாகவோ அல்லது கிராம முன்னேற்றச் சங்கங்கள் ஊடாகவோ அல்லது இளைஞர் கழகங்கள் ஊடாகவோ அணி திரண்டு பொதுமக்கள் மத்தியில் இவை தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது முதலாம் கட்ட நடவடிக்கையாகும்.

அதன் பின்னர் சுழற்சி முறைக் கடன் பொறிமுறையொன்றை உருவாக்கி அதன் ஊடாக குறுகிய கால கடன்களை வழங்கி தம் பிரதேச மக்களின் வாழ்வில் ஒளியூட்ட முன்வர வேண்டும்.

மறுபுறத்தில் தமிழ் மக்களின் இளைய தலைமுறை மதுவுக்கும், மாதுவுக்கும், போதைப் பொருள் பாவனைக்கும் உள்ளாக்கப் படுவதை தயவு செய்து தடுத்து நிறுத்தி அவர்களை ஆக்கபூர்வமான வழிகளில் ஊக்குவிக்கவேண்டும்.

குடும்பத்துக்காக உழைக்கும் நபர்களாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அப்போது இவ்வாறான பொருளாதார பிரச்சினைகளை தவிர்த்துக்கொள்வதுடன் அநியாயமாக பலியாகும் உயிர்களையும் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

அத்துடன் நுண்கடன் வழங்கும் நிறுவனங்களின் பேரினவாத நிகழ்ச்சி நிரலின் ஒரு அம்சமாக சீரழிக்கப்படும் இளைய சமுதாயத்தினர் மத்தியில் இஸ்லாமியர்களுக்கு எதிரான இனவாதப்போக்கு தீவிரம் பெற்று வருவதையும் காணக்கூடியதாக உள்ளது.

இதுவும் கவலைக்குரிய விடயமாகும். இதற்கும் ஒரு முடிவு கட்டப்பட்டு இரு இனங்களின் நல்லிணக்கம் வலுப்பட்டு பரஸ்பரம் ஒத்தாசை செய்துக் கொள்ளக் கூடிய சூழல் எம் மத்தியில் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் பேராசிரியர் எஸ்.எல். றியாஸ் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

Related posts