வட மாகாண சபை அசமந்தப் போக்குடன் செயற்படுவதாக தவராசா சாடல்!

வட மாகாண சபை தொடர்ந்தும் அசமந்த போக்குடன் செயற்பட்டு வருவதாக வட மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா குற்றம் சுமத்தியுள்ளார்.

ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் எதிர்க்கட்சித் தலைவர் தவராசாவால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த விடயம் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதன் மூலம் நிரூபனமாவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உத்தியோகபூர்வ தகவல்களின் அடிப்படையில், பாடசாலைகள் தவிர்ந்த வட மாகாண சபையின் அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களில் மொத்தமாக 7 ஆயிரத்து 510 வெற்றிடங்கள் உள்ளன

சிரேஸ்ட நிலையில் 590 வெற்றிடங்களும், மூன்றாம் நிலையில் 123, இரண்டாம் நிலையில் 4ஆயிரத்து 672 வெற்றிடங்களும், ஆரம்ப நிலையில் 2 ஆயிரத்து 63 வெற்றிடங்களும், சேவை நிலை குறிப்பிடப்படாத 62 வெற்றிடங்களும் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4 ஆயிரத்து 791 ஆக இருந்த வெற்றிடப் பட்டியல், 2016 டிசம்பரில் 2,957 ஆகக் குறைந்த நிலையில், தற்போது அது 7ஆயிரத்து 510 ஆக உயர்வடைந்துள்ளது.

இங்கு முக்கியமாகக் கவனிக்க வேண்டியது மத்திய அரசாங்கத்தினால் ஆட்சேர்ப்புச் செய்யப்படல் வேண்டும் என்பதற்காக அவர்கள் செய்யவில்லை என அவர்கள் மேல் குற்றம் சுமத்தி விட்டு நாம் தப்பித்துக் கொள்ள முடியாது.

மக்கள் மீது உண்மையில் அக்கறை கொண்டவர்களாக இருப்பின் இவ் வெற்றிடங்களை நிரப்புமாறு அதற்கான நியாயப்பாடுகளுடன் தொடர்ச்சியான அழுத்தங்களை மத்தியின் சம்பந்தப்பட்ட அமைச்சுகளிற்குக் கொடுத்திருத்தல் வேண்டும்.

அவ்வாறாக நியாயப்பாடுகளுடனான அழுத்தங்களை முதலமைச்சர் அல்லது ஏனைய அமைச்சர்கள் பிரயோகித்தமைக்கான ஆதாரங்களாக கடிதங்களை அல்லது கூட்ட அறிக்கைகளினை அவர்களினால் சமர்ப்பிக்க முடியுமா? என என எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

3ஆயிரத்து 9 வெற்றிடங்கள் நேரடியாக மாகாண சபையினால் நிரப்பப்பட வேண்டியதாயினும், துறைசார் திணைக்களங்களிற்குரிய சேவைப் பிரமாணக் குறிப்புக்கள் தயாரிக்கப்படாமையினாலும், மாகாண சபையின் அசமந்தப் போக்கினாலும் இவை நிரப்பப்படவில்லை என அவர் இதன்போது குற்றம் சுமத்தியுள்ளார்.

Related posts