வறுமையை ஒழிப்பு: ’ஜனாதிபதியின் திட்டம் பாராட்டுக்குரியது’

வறுமையை ஒழிப்பதற்காக ஜனாதிபதியால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களால், இலங்கை கிராமிய மக்களிடையே வறுமை நிலை குறைவடைந்து வருவதாக, உலக வங்கியின் தெற்காசிய வலயத்துக்குப் பொறுப்பான உப தலைவர் கலாநிதி ஹார்ட்விங் ஸ்சபர் (Hartwig Schafer) தெரிவித்தார்.

இலங்கைக்கு வருகை தந்துள்ள உலக வங்கியின் உப தலைவர், (15) பிற்பகல்,  ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில், ஜனாதிபதியைச் சந்தித்தார்.

இதன்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கை படிப்படியாக முன்னேற்றத்தை நோக்கி பயணிக்கும் நாடாக உலக வங்கி கண்டறிந்துள்ளது என்பதை தெரிவித்த உப தலைவர், தற்போது தனிநபரொருவரின் வருமானம் 4,000 டொலராகக் காணப்படுகின்றமை மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார்.

கிராமிய ரீதியில், வறுமையை ஒழித்து அம்மக்களை பொருளாதார ரீதியில் வலுப்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தியிருக்கும் விசேட வேலைத்திட்டங்கள், அவ்வாறான வளர்ச்சிக்கு ஊன்றுகோலாக அமைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன்போது, இலங்கையில் குளங்களை மறுசீரமைப்பதற்கும் பாரிய நீர்ப்பாசன வேலைத்திட்டங்களுக்கும் ஒத்துழைப்பு வழங்குமாறு, ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கு, உபதலைவர் அவரது விருப்பத்தையும் தெரிவித்தார்.

10,000 குளங்களை அபிவிருத்தி செய்யும் செயற்றிட்டத்தின் கீழ், 2,400 குளங்களை மறுசீரமைப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

வானிலை, காலநிலை மாற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும் வேலைத்திட்டங்களுக்கு, உலக வங்கியால் இலங்கைக்கு தொடர்ச்சியாக வழங்கப்படும் ஒத்துழைபுக்கு, ஜனாதிபதி நன்றி கூறினார்.

Related posts