வவுணதீவில் பலத்த காற்றினால் சேதமடைந்துள்ள 62 வீடுகளுக்கு முதற்கட்டமாக 10,000ரூபா வழங்கப்படவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை (16.06.2019 அன்று ) ஏற்பட்ட பலத்த இடிமின்னல், மழையுடன் கூடிய சூறைக்காற்றினால் வீடுகள், கட்டிடங்கள், மரங்கள் என்பனவற்றுக்குச் சேதம் ஏற்பட்டதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.

இக் காற்றினால் கூரைகள்  பல கழற்றி வீசப்பட்டதுடன், ஏராளமான மரங்கள்  சரிந்து வீழ்ந்துள்ளன.

வவுணதீவு பிரதேசத்தில் இலுப்படிச்சேனை, மண்டபத்தடி, கொத்தியாபுலை, தாண்டியடி, காஞ்சிரங்குடா, புதுமண்டபத்தடி உள்ளிட்ட பகுதிகளில்  வீசிய சூறைக்காற்றினால் அங்கிருந்த சுமார் 62 வீடுகளுக்கு பகுதிச் சேதம் ஏற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு அனர்த்த மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
  
மட்டக்களப்பு மாவட்ட செயலாளரின் பணிப்புரைக்கமைவாக  மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சியாத், மாவட்ட அனர்த்த ஒருங்கிணைப்பாளர் ஆர். சிவநாதன், மண்முனை மேற்கு பிரதேச செயலக அனர்த்த நிவாரண உத்தியோகத்தர் என்.சிவநிதி  மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் திங்கட்கிழமை பகல் சேதமடைந்த வீடுகளை  பார்வையிட்டனர்.

சேதமடைந்த வீடுகளுக்கு முதற்கட்டமாக 10,000 நிதி வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட செயலக அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர்.

Related posts