விஜயகலாவின் ஆதங்கத்தை விளங்கிக்கொள்ளாமல் விமர்சிக்க வேண்டாம்: ஆனந்தசங்கரி

அனைவரும் விமர்சிக்கும் அளவிற்கு விஜயகலா மகேஸ்வரன் பெரும் குற்றவாளியல்லர். வடக்கில் இடம்பெறும் குற்றச்செயல்களுக்காக ஆதங்கப்பட்டே அவர் கருத்து வெளியிட்டுள்ளார் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன், யாழ்ப்பாணத்தில் ஆற்றிய உரையொன்றில் விடுதலைப் புலிகள் இருந்திருக்க வேண்டுமென கூறியமை பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி, இறுதியில் அவர் தமது இராஜாங்க அமைச்சர் பதவியையும் துறந்தார். இதுகுறித்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரி இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “நாம் அனைவரும் அவரது உணர்வுகளை விளங்கிக்கொள்ள வேண்டும். வடக்கில் அதிகரித்துவரும் குற்றச் செயல்களின் பின்னணியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருக்கின்றார்.

யாழில் இடம்பெற்ற சிறுமியின் உயிரிழப்பு அவரைப் பாதித்ததால் பாச உணர்வால் தூண்டப்பட்டு அடிமனதில் இருந்து வந்த வார்த்தையாக அவரது உரை அவ்வாறு இடம்பெற்றிருக்கலாம்.

நாடாளுமன்ற சகபாடிகள், அமைச்சர்கள் உள்ளடக்கிய சபையினரை கவரும் நோக்கோடு விளைவுகளைப்பற்றி சிந்திக்காமல் ஆற்றிய உரையாகும்.

நாட்டின் இறைமை பற்றி சத்தியப்பிரமாணம் எடுத்த பின்பு விஜயகலா ஏதாவது தவறு செய்திருந்தார் என்றால், அவ்வாறே சத்தியம் செய்த சில அரசியல்வாதிகள் தவறாக செயற்படுகின்றனர். அவ்வாறான அரசியல்வாதிகளின் செயற்பாட்டுடன் ஒப்பிடுகையில் விஜயகலா பெரும் குற்றவாளியல்லர்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts