23 வது படைப்பிரிவின் கொமாண்டர் மேஜ ஜெனறல் நலின் கொஸ்வத்தைக்கு மாவட்ட செயலகத்தில் பிரியாவிடை!!

இலங்கை இராணுவத்தின் 23 வது படைப்பிரிவின் கொமாண்டர் மேஜ ஜெனறல் நலின் கொஸ்வத்தை தனது 35 வருட சேவையை நிறைவு செய்து சேவையில் இருந்து ஓய்வு பெறுவதை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் சேவையைப் பாராட்டி கௌரவிப்பு நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.
 
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான கே.கருணாகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சனி ஸ்ரீகாந்த், 231 வது படைப்பிரிவின் பிறிகேட் கொமாண்டர்  திலீப பண்டார, மட்டக்களப்பு பிரிவிற்கான பொலிஸ் அத்தியட்சகர் எல்.ஆர்.குமாரஸ்ரீ, மட்டக்களப்பு பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சுகுணன் குணசிங்கம், பிரதி பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நா.மயூரன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியகலாநிதி திருமதி கலாரஞ்சினி கணேசலிங்கம், விசேட வைத்திய நிபுணர்
வைத்தியகலாநிதி கே. ரீ. சுந்தரேசன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.சசிகலா புண்ணியமூர்த்தி, மாவட்ட செயலக கணக்காளர் எம். வினோத், மாவட்ட ஊடக அதிகாரி வ.ஜீவானந்தன் உள்ளிட்ட இராணுவத்தரப்பு உயரதிகாரிகளும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.
 
மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை மாவட்டத்தின் கொரோனா தடுப்பு செயலணிக்கு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட இராணுவத் தரப்பு பிரதானியான கொமாண்டர் மேஜ ஜெனறல் நலின் கொஸ்வத்தை அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா அதிகரித்து காணப்பட்ட வேளையில் கொரோனாவை துரிதகதியில் கட்டுப்படுத்துவதற்காக  செயற்பட்டமையினையும், மாவட்டத்தின் வர்த்தகர்கள் மூலம் உதவிகளைப் பெற்று பீ.சி.ஆர் பரிசோதனை இயந்திரங்களை பெற்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பரிசோதனைகள் மேற்கொள்வதில் ஏற்பட்ட நெருக்கடி நிலையை குறைத்தமைக்காகவும் மாவட்ட கொவிட் தடுப்பு செயலணியின் சார்பில் அவருக்கு இதன்போது முன்னால் பிராந்திய சுகாதார பணிப்பாளர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மற்றும் விசேட வைத்திய நிபுணர்
வைத்தியகலாநிதி கே. ரீ. சுந்தரேசன் உள்ளிட்டோரினால் பாராட்டும் நன்றியும் தெரிவிக்கப்பட்டது.
 
அத்தோடு இறுக்கமான காலகட்டத்தில் மட்டக்களப்பு மக்களுக்காக இவரால் கடந்த ஒருவருட காலத்திற்குள் ஆற்றப்பட்ட சேவையைப் பாராட்டி மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் அவர்களுடன் ஏனைய திணைக்களங்களின் பிரதானிகளும் இணைந்து இவருக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவித்துள்ளனர்.

Related posts