93 கிராமசேவையாளர் பிரிவுகளிலுள்ள ஒன்றரை லட்சம் மக்களுக்காக இருப்பது ஆக120பொலிசார்

எமது பிரதேசத்திலுள்ள சம்மாந்துறை காரைதீவு  நிந்தவூர் ஆகிய மூன்று பிரதேசசெயலர் பிரிவுகளில் 93கிராமசேவையாளர் பிரிவுகளுள்ளன.அங்கு வாழும் ஒன்றரை லட்சம் மக்களுக்காக இருப்பது ஆக 120பொலிசாரே. எனவே பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகமிக அவசியமாகும்.
 
இவ்வாறு சம்மாந்துறை பொலிஸ்நிலைய குற்றத்தடுப்புப்பிரிவின் பொறுப்பதிகாரி வை.விஜயராஜா காரைதீவில் உரையாற்றுகையில் தெரிவித்தார்.
 
அண்மைக்காலமாக காரைதீவுப்பிரதேசத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் திருட்டுச்சம்பவங்கள் தொடர்பாகவும் அவற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் நேற்றுமாலை காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் கலந்துரையாடலொன்று  நடைபெற்றது.
 
காரைதீவு பிரதேச பொதுநூலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் காரைதீவு பிரதேசசெயலாளர் சிவ.ஜெகராஜன் கடற்படை அதிகாரி காரைதீவு பிரதேசசபை உறுப்பினர்களான மு.காண்டீபன் த.மோகனதாஸ் ஆ.பூபாலரெத்தினம் மற்றும் ஆலயத்தலைவர்கள் அதிபர்கள் சமுகசெயற்பாட்டாளர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
 
களவுகளைக்கட்டுப்படுத்துவதில் பொலிசாருக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பை எவ்வாறு பெறலாமென்பதையிட்டு முதலில் கலந்துரையாடப்பட்டது.
 
அங்கு அவர் மேலும் உரைநிகழ்த்துகையில்:
இன்றைய கொரோனா சூழலில் நாம் பலதரப்பட்ட பணிகளை ஆற்றவேண்டியிருக்கிறது. மேலும் குடும்பச்சண்டைகள் கொலை களவு என்று ஏகப்பட்ட குற்றச்செயல்களையும் பார்க்கவேண்டும்.
 
ஆனால் எமக்கிருக்கின்ற 120பொலிசாரில் பல்வேறு கடமைகளில் ஈடுபடுகின்றவர்களை தவிர்த்தால் ஆக 30பேரே பொதுமக்கள் பிரச்சினைகளை பார்க்கவேண்டிவரும். உள்ளது 2ஜீப்வண்டிகள். இவை போதாது.
 
சம்மாந்துறைப்பொலிஸ் பிரிவில் சம்மாந்துறை நிந்தவூரை விட காரைதீவில் அண்மைக்காலமாக கொள்ளை திருட்டுச்சம்பவங்கள் அதிகரித்துவருவதை அவதானிக்கக்கூடியதாயுள்ளது.
 
இவைகளில் 50வீதமான களவுகள் இன்னும் பிடிபடவில்லை. எனவே பொதுமக்கள் ஒத்துழைத்தால் களவுகளை தவிர்க்கலாம். 
 
பொதுவாக களவுபோவதற்கு ஒரு காரணம் பொதுமக்களது கவலையீனம். கதவுகளை யன்னல்களை திறந்துவிட்டு தூங்குவது பூட்டினாலும் சாவிக்கொத்தை பகிரங்கமாக தொங்கவிடுவது அலுமாரிகளில் நகைகளை பணத்தை பாதுகாபபின்றி வைப்பது அதுமட்டுமல்ல குறித்த அலுமாரியை பூட்டினாலும் திறப்பை அங்கேயோ தொங்கவிடல். பொலிசார் வரமுன்பே தடயங்களை இல்லாமல்செய்தல். பாதுகாப்பு கமராக்களை முறையான விதத்தில் பொருத்தாமை இப்படி பல.
 
இனி உற்சவகாலம். நகை நட்டுக்களை கவனமாக தங்களுடன் வைத்திருக்கவேண்டும். வீட்டைப்பூட்டாமல் வெளியே செல்லக்கூடாது.
 
இனிமேல் இரவு 10மணி தொடக்கம் அதிகாலை 4மணிவரை வீதிகளில் திரிந்தால் கைதுசெய்யவேண்டிவரும். அடையாளஅட்டை முதலான ஆவணங்களை கையில்வைத்திருத்தல் அவசியமாகின்றது. என்றார்.
 
பிரதேசசெயலர் சிவ.ஜெகராஜன் கூறுகையில்:
ஜனாதிபதி இன்றைய கொரோனாவுக்காக சமுகப்பாதுகாப்பிற்கென பொலிசாருடன் முப்படையினரையும் ஈடுபடுத்தியுள்ளார். எனவே இரவில் ரோந்து போதல் ஒருவகையில் களவுகளை கட்டப்படுத்தஉதவும். 
 
சட்டத்தை நாம் மதிக்கவேண்டும். குற்றத்தின் பாரதூரங்களை உணரச்செய்தல் வேண்டும்.சிறுகுற்றங்களே பெரிய குற்றங்களுக்கு வழிவகுக்கிறது. என்றார்.
 
பொலிஸ் சார்ஜன்ட் ஆரியசேன சிங்களத்தில் கூறியதாவது:
சம்மாந்துறை பொலிஸ் நிலையம் எனது23வது சேவை நிலையமாகும். காரைதீவு படித்தஊர். ஆனால் வேறிடத்திலிருந்து வரும் திருடர்கள்தான் இங்கு களவுகளைச்செய்கின்றார்கள்.
கொழும்பில் இல்லாத கள்ளன் இப்பகுதியில் இருக்கிறான். 50கோழிகளை அப்படியே தூக்கிற்றுபோன சம்பவங்களும் இங்குதான் நடைபெற்றுள்ளன. 
 
நாம் கதிர்காமத்திற்கு  அல்லது வேறு இடங்களுக்கு செல்வதானால் ஒரு வாரத்திற்கு முன்பே ஊரெல்லாம் சொல்லிவிடுவது வழமையாகும். இந்த பிரசித்தம் கள்ளனுக்கு வாசியாகும்.தருணம் பார்த்து கன்னமிடுவான். ஆகவே உங்களது பாதுகாப்பு பொலிசாரிடமில்லை மாறாக உங்களிடமே உள்ளது. என்றார்.
 
கூட்டத்தில் எடுத்த தீர்மானங்களின்படி  காரைதீவில் குறிப்பாக இரவுவேளைகளில் முப்படையினருடன் இணைந்து பொலிசார் ரோந்து நடவடிக்கையிலீடுபடுவது என்றும் இதுதொடர்பான விழிப்புணர்வூட்டும் தகவலை சகல ஆலய ஒலிபெருக்கிகளினூடாக மக்களுக்கு அறிவிப்பது என்றும் முடிவானது.
 
கூட்டத்தில் அதிபர் இ.ரகுபதி சமுகசெயற்பாட்டாளர்களான வே.இராஜேந்திரன் ஆ.பூபாலரெத்தினம் இ.குணசிங்கம் ச.தங்கவேல் வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் பல ஆக்கபூர்வமான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்கினர்.காரைதீவு உப பொலிஸ் நிலையம் தொடர்பாகவும் சில பிரதிநிதிகள் பல எதிர்மறையான கருத்துக்களையும் வழங்கினர்.இறுதியில் பொதுமக்கள் பூரணமாக பொலிசாருக்கும் முப்படையினருக்கும் ஒத்துழைப்பு வழங்குதென்று முடிவானது. 

Related posts