இலங்கையில் விரைவில் இராணுவ ஆட்சி?

கூடிய விரைவில் இலங்கையில் இராணுவ ஆட்சி ஏற்படுவதற்கான தோற்றப்பாடுகள் காணப்படுவதாக வட.மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) எமது  செய்திப்பிரிவிற்கு வழங்கிய விசேட பேட்டியொன்றிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘இனப்படுகொலையைப் புரிந்த இராணுவத்தினது தளபதிக்கு வட.மாகாணசபை தொடர்பாகக் கருத்துக் கூறுவதற்கு எந்தவிதமான தகுதியும் இல்லை. அதற்கு அவருக்கு எந்த அருகதையும் இல்லை.

இராணுவத் தளபதியின் வடக்கு மாகாணசபை தொடர்பான கருத்து அவரது அதிகாரத் திமிரையே வெளிப்படுத்தியிருக்கின்றது. இதன்மூலம் விரைவில் இலங்கையில் இராணுவ ஆட்சி வரப்போகின்றது என்பது தெளிவாகின்றது.

மக்களுடைய காணிகளை இன்னமும் திருப்பிக் கொடுக்க முடியாதவர்கள் எவ்வாறு மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றப் போகின்றார்கள். நாம் முழு இராணுவத்தினையும் வெளியேற்றக் கோரவில்லை. தேவைக்கதிகமான நிலையில் உள்ள படையினரையே வெளியேற்றக் கோரியுள்ளோம்.

முழு அளவில் படையினர் வெளியேறினால் தனித் தமிழீழம் ஆக அமைந்துவிடும் எனும் தோற்றப்பாடு காணப்படும் என அதிகாரத்தரப்பு அச்சமடைந்துள்ளது. இராணுவத்தினது பிரசன்னம் தமிழ்ப் பிரதேசங்களில் அதிகமாகக் காணப்படுவதால் மக்களது வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

பண்ணைகள், விடுதிகள் மற்றும் வர்த்தக நிலையங்களை இராணுவத்தினர் நடத்தி வருவதால் அனைத்துப் பிரதேசங்களிலும் மக்களின் வாழ்வாதாரம் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்தும் மக்களது உரிமைகள் மீறப்பட்டும் உதாசீனப்படுத்தப்பட்டும் காணப்படுமாக இருந்தால் எதிர்காலத்தில் ஈழத்தமிழினம் ஒன்று சேர்ந்து போராட வேண்டிய தேவை ஏற்படும்’ என வட.மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts