ஒரு இலட்சம் இளையோருக்கான வேலை வாய்ப்பு திட்டத்தில் அரசாங்கத்தின் பங்காளி கட்சியினருக்கு பாரதூரமான அநீதி – விஷ்ணுகாந்தன் குமுறல்

ஒரு இலட்சம் இளையோருக்கான வேலை வாய்ப்பு திட்டத்தில் ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பங்காளி கட்சிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டு இருப்பதாக இலங்கை மக்கள் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் என். விஷ்ணுகாந்தன் தெரிவித்தார்.
 
இவ்வேலை வாய்ப்பு திட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பங்காளி கட்சிகளுக்கு கணிசமான ஒதுக்கீடுகள் நியாயமாக வழங்கப்படும் என்று பங்காளி கட்சி தலைவர்களை ஜனவரி மாதம் சந்தித்து பேசியபோது பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உறுதி மொழி வழங்கி இருந்தார்.
 
இந்நிலையில் இவ்வுறுதி மொழி நிறைவேற்றி கொடுக்கப்படாமல் இருப்பது குறித்து நேற்று வெள்ளிக்கிழமை  விஷ்ணுகாந்தன் ஊடகங்களுக்கு மேலும் தெரிவித்தவை வருமாறு
 
நாமும் ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் பங்காளி கட்சியினர். எம் போன்ற பங்காளி கட்சியினரின் பேராதரவுடனேயே ஜனாதிபதி தேர்தல், பொது தேர்தல் ஆகியவற்றில் மகத்தான வெற்றி ஈட்டி பொதுஜன பெரமுன ஆட்சி அமைத்து உள்ளது.
 
நாம் எமது மக்களின் நலன்களை முன்னிறுத்தி முன்வைத்த வேண்டுகோள்களை அவர்கள் ஏற்று கொண்டதன் அடிப்படையிலேயே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பங்காளிகளாக புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டு ஆதரவு வழங்கி இருந்தோம். 
 
இதில் ஒன்றாக அரசாங்க தொழில் துறைகளில் வேலை வாய்ப்புகள் வழங்கப்படுகின்றபோது எமக்கு நியாயமான ஒதுக்கீடுகளை மேற்கொண்டு தர வேண்டும் என்று கேட்டு இருந்தோம். இதற்கான உத்தரவாதமே பிரதமரால் பின்பு மீண்டும் உறுதி செய்யப்பட்டது.
 
ராஜபக்ஸக்கள் பொதுவாக வாக்குறுதிகளை நிறைவேற்றுபவர்கள். மாறாக வாய் ஜாலம் நடத்துபவர்கள் அல்லர். இருப்பினும் மட்டக்களப்பு மாவட்டத்தில் எமது கட்சியின் வளர்ச்சியையும், எழுச்சியையும் பொறுக்க முடியாத கள்ள வியாழன்களும், சின்ன பிள்ளையான்களும் எமக்கான ஒதுக்கீடுகளை தடை செய்து குறுக்கீடுகளை போட்ட வண்ணம் உள்ளனர்.
 
ஆயினும் சூரியனை மேகங்களால் எப்போதும் மறைத்து வைத்திருக்க முடியாது. நாம் தடைகளை தகர்த்தெறிந்து உடைத்து எமக்கான நீதியை நிச்சயம் பெற்று கொள்வோம். சக பங்காளி கட்சியினரை இணைத்து கொண்டு இதற்கான முன்னெடுப்புகளை ஆரம்பித்து உள்ளோம். எமக்கான ஒதுக்கீடுகள் எதிர்கால வேலை வாய்ப்புகளின் போதாவது கிடைத்தல் வேண்டும்.

Related posts