கல் வீடுகளுக்குப் பணமில்லையாம்

வடக்கிலும் கிழக்கிலும் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 25,000 கல் வீடுகளை அமைப்பது தொடர்பான ஐக்கிய நாடுகளின் முன்னெடுப்புக்குத் திறைசேரியால் பணமொதுக்க முடியாது என, பிரதமர் அலுவலகம், ஐ.நாவுக்கு அறிவித்துள்ளது. ஐ.நாவின் ஹபிட்டட், செயற்றிட்டச் சேவைகளுக்கான ஐ.நா அலுவலகம் ஆகியன தலைமையிலான ஐ.நா கூட்டணிக்கே, இவ்வறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு, கல் வீடுகளுக்கு நிதியொதுக்க அரசாங்கம் மறுத்தாலும், கிழக்கில் 7,000 பொருத்து வீடுகளை அமைப்பதை நிதியளிப்பதற்காக, சுமார் 8 பில்லியன் ரூபாயை அரசாங்கம் ஒதுக்கவுள்ளது. முன்னாள் வீடமைப்பு அமைச்சர் டி.எம். சுவாமிநாதனால் ஆதரவளிக்கப்படுபவர் எனக் கருதப்படும் ரவி வெத்தசிங்க எனும் ஒருவரால் நடத்தப்படும் நிறுவனத்தாலேயே இவ்வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.

அதேபோன்று, பாரம்பரிய வகையிலான 10,000 வீடுகளை அமைப்பதற்காக, தனியான நிதியொதுக்கையும், அரசாங்கம் அனுமதித்துள்ளது. இவற்றில் முதற்தொகுதியாக 4,750 வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள், கடந்த மாதம் ஏற்கெனவே ஆரம்பித்துள்ளன. 

ஐ.நாவின் வீடமைப்பு முன்னெடுப்பு, அமைச்சரவையால் கடந்தாண்டு அங்கிகரிக்கப்பட்டது. ஆனால், அதற்கான ஒப்பந்தத்தைக் கைச்சாத்திடுவது பின்தள்ளப்பட்டு வந்தது. இதைத் தொடர்ந்து, இவ்வார இறுதியில் ஐ.நா பிரதானிகளை அழைத்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, குறித்த திட்டத்துக்கு நிதியளிப்பை வழங்க முடியாது எனவும், அவர்களின் முன்னெடுப்புக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கிறது எனவும் தெரிவித்துள்ளார். 

எனினும், பிரதமரின் கருத்துக்கு மறுப்புத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் எம்.பி, கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள பொருத்து வீடுகளை, தமது கட்சி எதிர்த்து வந்தது என்பதையும் சுட்டிக்காட்டினார்.  

Related posts