காரைதீவு உபதவிசாளர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை! ஒரு மாத காலத்திற்கு இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

காரைதீவு பிரதேசசபையின் உபதவிசாளர் ஏ.எம்.ஜாகீர் மீது  ஒழுக்காற்றுநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி ஒருமாத காலத்திற்கு சபை நடவடிக்கைகளிலிருந்து அவர்  இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தவிசாளர் கி.ஜெயசிறில் குறித்த  உபதவிசாளருக்கு நேற்று கடிதம்மூலம் அறிவித்துள்ளார்.

அதன்படி இம்மாதம் 12ஆம் திகதி முதல் மார்ச்மாதம் 12ஆம் திகதி வரை  1988.01.13ஆம் திகதிய 488/16ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் மூலம்  வெளியிடப்பட்ட பிரதேசசபைக்கூட்டம் பற்றிய விதிகளின் 24(2)இன் பிரகாரம்  சபைநடவடிக்கைகளிலிருந்து  இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரதிகள் திருகோணமலை உள்ளுராட்சி ஆணையாளருக்கும் அம்பாறை பிராந்திய
உள்ளுராட்சி ஆணையாளருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன..

கடந்த 11.02.2019ஆம் திகதி நடைபெற்ற சபையின் 12வது மாதாந்த அமர்வில்  கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கையில் கூட்டஒழுங்குவிதிகளை  5சந்தர்ப்பங்களில் மீறியுள்ளதே அதற்கான குற்றச்சாட்டாகும் என  அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தவிசாளர் பேசுகையில் அதனைக்குறுக்கீடு செய்து தவிசாளரை அவமதித்து  கைநீட்டிப் பேசியமை  இந்துமதத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில்  ‘கும்பிடு  போடவேண்டுமா?’ என்று செய்கைமூலம் கேட்டு பேசியமை தவிசாளரின் உத்தரவினை  மீறி மீண்டும் மீண்டும் ஒரேவிடயத்தினைக் கூறிக்கொண்டிருந்மமை  சட்டத்திற்குமுரணாக தவிசாளரின் அனுமதியின்றி ஒரு ஊடகவியலாளரையும்  பொதுமகனையும் சபைக்கு அழைத்துவந்மமை மேசையில் அடித்து எழும்புங்கள்  போவோம் என கலகம் விளைவிக்கும் நோக்கில் சபைநடந்துகொண்டிருக்கையில் சபா  மண்டபத்தை விட்டு வெளியேறியமை ஆகிய 5 குற்றச்சாட்டுகள்  குறிப்பிடப்பட்டுள்ளன.

குறித்த 5குற்றச்சாட்டுகளும் அதேசபையில் பிரேரணையாக கொண்டுவரப்பட்டு  வாக்கெடுப்பிற்குவிடப்பட்டபோது மேலதிக வாக்குகளால் பிரேரணை  நிறைவேற்றப்பட்டது.

இதன் பிரகாரம் இந்த ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

Related posts