கிழக்கில் 17 கல்வி வலயங்களில் தொலைபேசியூடாக கற்பித்தல்சேவை ஆரம்பிக்த் தீர்மானம்

கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் மதியஉணவைப் பெற்றுவந்த சகல மாணவர்களுக்கும் 1000ருபா பெறுமதியான உலருணவுப்பொதிகள் வழங்கப்படவுள்ளது. உலருணவுப் பொதியில் பிஸ்கட் நூடில்ஸ் பயறு முட்டை உள்ளிட்ட உணவுப்பொருட்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும்.
 
கொரோனா விடுமுறையின்பின்னர் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வியமைச்சின் செயலாளர் எச்.எம்.சித்ரானந்தா இன்று(06) புதன்கிழமை கிழக்கு மாகாணக்கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூரைச் சந்தித்துப்பேசியபோது மேற்படி தகவல் தெரிவிக்கப்பட்டது.
 
மேலும் பாடசாலைகள் ஆரம்பிக்கும் திகதி பற்றி தற்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுவருகிறது. இறுதியாக சுகாதார அமைச்சு கல்வி அமைச்சு கலந்துரையாடல்களை மேற்கொண்டு ஜனாதிபதி செயலகத்திற்கு அறிவிக்கப்படும். ஜனாதிபதி செயலகமே பாடசாலை ஆரம்பிக்கும் திகதியை அறிவிக்கும் என்று அங்கு கூறப்பட்டது.
 
பாடசாலைகளை மீளத்திறந்து கல்விச்செயற்பாடுகளை படிப்படியாக ஆரம்பிக்கும் செயற்பாட்டை முன்னெடுக்குமுகமாக கல்வியமைச்சின் செயலாளர் எம்.எச்.சித்ரானந்தா நாடுபூராகவுள்ள ஒன்பது மாகாணங்களின் கல்விப்பணிப்பாளர்களை ஒவ்வொருவராகச் சந்தித்துக்கலந்துரையாடி வருகிறார்.
 
அநதவகையில்இன்று (6) புதன்கிழமை திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் பணிமனையில் இச்சந்திப்பு மு.பகல் 10.30மணி தொடக்கம் பி.பகல் 1மணிவரை நடைபெற்றது.
 
கல்வியமைச்சின் செயலாளர் எம்.எச்.சித்ரானாந்தாவுடன் மேலதிக செயலாளர் எச்.ஹேமந்த இராஜாங்க அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.
 
கிழக்குமாகாண பிரதம செயலாளர் துஷித பி வணிகசிங்க  சுகாதாரஅமைச்சின் செயலாளர் எ.எச்.எம்.அன்சார் மாகாணசுகாதாரசேவைப்பணிப்பாளர் டாக்டர் அழகையா லதாகரன் ஆகியோரும் சமுமளித்திருந்தனர்.
 
கிழக்கு மாகாணக்கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் தலைமையிலான குழுவில் மேலதிக மாகாணக்கல்விப்பணிப்பாளர்களான எ.விஜயானந்தமூர்த்தி திருமதி எஸ்.வரதசீலன் பிரதிக்கல்விப்பணிப்பாளர்களான பி.காப்;தீபன்(கல்வி திட்டமிடல்) ஆர்.நிமலரஞ்சன்(கல்வி அபிவிருத்தி) ஆகியோர் கலந்துகொண்டனர்.
 
சமுக இடைவெளியைப்பேணி எவ்வாறு வகுப்பை நடாத்துவது தொடர்பில் முதலில் விரிவாகக்கலந்துரையாடப்பட்டது.
 
பின்பு கிழக்கு மாகாணத்தில் கொரோனாஅச்சத்தால் மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீளத்திறப்பது சுத்தப்படுத்தல் மாணவர்களுக்கான கற்றல் கற்பித்தல்களை எவ்வாறு ஆரம்பித்தல்? பரீட்சைகள் ஏனைய களநிலவரங்கள் பற்றி விரிவாக  கலந்துரையாடப்பட்டன.
 
சில ஆக்கபூர்வமான விடயங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
 
பாடசாலைகள் ஆரம்பமாக முன்பு பாடசாலைகளை சுத்தப்படுத்த உடனடியாக 8.2மில்லியன் ருபா ஒதுக்கீடு செய்யப்பட்டது. சுகாதாரத்துறையினரின் வழிகாட்டலுக்கமைய இச்செயற்பாட்டை பாடசாலைச்சமுகம் முன்னெடுக்கவேண்டும். பாடசாலை ஆரம்பமாகும் திகதி அறிவிக்கப்பட்ட பிற்பாடே இச்சுத்தப்படுத்தல் எப்போது நடைபெறும் என்பதை அறிவிப்பது என்று முடிவானது.
 
ஒன்லைன் தொலைக்காட்சி வானொலி கல்விச்சேவைகளுக்கு அப்பால் பரீட்சார்த்தமாக கிழக்குமாகாணத்திலுள்ள 17கல்வி வலயங்களில் 17பாடசாலைகளைத் தேர்ந்தெடுத்து தொலைபேசியூடாக கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
இது எதிர்வரும் 18ஆம் திகதி பரீட்சார்த்தமாக ஆரம்பமாகும். கற்பிக்கும் ஆசிரியர் அன்றோயிட் தொலைபேசி வைத்திருத்தல் போதுமானது. மாணவர்கள் சாதாரண தொலைபேசியில் கற்றலை மேற்கொள்ளலாம். இதற்கு டயலொக் நிறுவனம் அனுசரணை வழங்குகிறது.
 
மேலும் முகக்கவசம் பரீட்சைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன. க.பொ.த உயர்தரப்பரீட்சை தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் ஓரிரு நாட்களில் இறுதி முடிவு அறிவிக்கப்படும் எனவும் குழுவினர் தெரிவித்தனர்.
 
இதுவரை தெற்கு வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களின் கல்விப்பணிப்பாளர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தி அவர்களது கருத்துகளை அறிந்துள்ளார்.இன்று(6) கிழக்குமாகாணத்திற்குவருகைதந்த செயலாளர் சித்ரானந்தா தொடர்ந்து வடக்கு ஊவா  மாகாணக்கல்விப்பணிப்பாளர்கள் மற்றும் மத்தியமாகாண கல்விப்பணிப்பாளரையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
 
ஒட்டுமொத்தமாக சகல மாகாணகல்விப்பணிப்பாளர்களையும் சந்தித்த பின்னர் ஒரு முடிவுக்கு வரவிருப்பதாகவும் பாடசாலைகளுக்கான விசேட நேரஅட்டவணையைத் தயாரிக்கவிருப்பதாக கல்வியமைச்சின் வட்டாரங்கள் தெரிவித்தன.
 
பொதுவான தரம் 10 அதற்கு மேற்பட்ட வகுப்புகளை முதலில் ஆரம்பிப்பதெனவும் சிலவேளை மாகாணத்திற்கு மாகாணம் விசேட நிகழ்ச்சிநிரலின்படி பாடசாலைகள் திறக்கப்படலாமெனவும் தெரியவருகிறது.
 
எதுஎப்படியிருந்தபோதிலும் முன்னர் தெரிவிக்கப்பட்டதுபோன்று எதிர்வரும் 11ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்பட சாத்தியமில்லையெனத் தெரிகிறது.

Related posts