சம்மாந்துறை வலயத்தில் இருபாடசாலைகளுக்கு பூட்டு.

சம்மாந்துறை  வலயத்தில் இரு பாடசாலைகள் கொரோனா காரணமாக மறுஅறிவித்தல்வரை பூட்டப்பட்டுள்ளதாக சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் தெரிவித்தார்.
 
சம்மாந்துறைக்கோட்டத்திலுள்ள தாருஸ்ஸலாம் மகாவித்தியாலயம் மற்றும் இறக்காமம் கோட்டத்திலுள்ள குடுவில் அல்ஹிறா வித்தியாலயம் ஆகிய இருபாடசாலைகளே பூட்டப்பட்டுள்ளன.
 
சம்மமாந்துறை தாருஸ்ஸலாம் மகாவித்தியாலயத்தில் பணியாற்றிய கல்விசாரா ஊழியரொருவருக்கு கொரோனாத்தொற்று  உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கடந்தவாரம் கொழும்பு துறைமுகத்திலிலிருந்து வந்த  சம்மாந்துறை ஊழியரொருவரின் உறவினர்களை பிசிஆர் பரிசோதனைக்குட்படுத்தியதில் ஜந்துபேருக்கு கொரோனத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. அவர்களில் ஒருவர் இவராவார். முதல் கொரோனாத்தொற்றாளியான கொழும்புதுறைமுக ஊழியரின் மைத்துனர் இவரென்பது குறிப்பிடத்தக்கது.
 
இக் கல்விசாரா ஊழியர் தற்போது சிகிச்சைநிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு ஏனைய குடும்ப உறவினர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
 
இதேவேளை குடுவில் பிரதேசத்திலும் ஒருவர் கொரோனாத்தொற்று இனங்காணப்பட்டதையடுத்து அக்கிராமத்தவர் விடுத்த வேண்டுகோளிலும் அங்கு இடம்பெற்ற கோட்ட அதிபர்களின் கூட்டத்தில் எடுத்த தீர்மானத்தின்படியும் குடுவில் அல்ஹிறா வித்தியாயலம் மூடப்பட்டுள்ளது.
 
ஏனைய இடைநிலை உயர்நிலைப்பாடசாலைகள் அனைத்தும் வழமைபோல் இயங்கிவருவதாகவும் அதுவரை எந்தவொரு ஆசிரியருக்கோ மாணவனுக்கோ கொரோனாத்தொற்று ஏற்படவில்லையெனவும்  பணிப்பாளர் நஜீம் மேலும் தெரிவித்தார்.

Related posts