‘தமிழர் உரிமைகளை மீண்டும் தந்தால், இணைந்து பயணிக்கத் தயார்’

தமிழர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட உரிமைகளை, இலங்கை அரசாங்கம் மீண்டும் தந்த பின்னர், மத்திய அரசாங்கத்துடன் இணைந்து செயலாற்ற முடியுமென, வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.  

ஆனால் முதலில், தமிழ்ப் பேசும் பிரதேசங்களான வடக்க, கிழக்கு மாகாணங்கள் இணைய வேண்டும் என்றும் சர்வதேச சட்டத்தின் கீழ், உள்நாட்டு சுயநிர்ணய உரிமை எமக்கு இருப்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், தமிழ்ப் பேசும் மக்கள் வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு, சமஷ்டி முறையிலான ஒரு தீர்வை அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.  

இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரித்தானியாவின், தெற்காசியத் திணைக்களத் தலைவரும் இந்திய ஒருங்கமைப்பாளருமான ஃபேர்கஸ் ஒளல்ட் மற்றும் முன்னாள் முதலமைச்சருக்கு இடையிலான சந்திப்பொன்று, இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

அங்கு தொடர்ந்து பேசிய முதலமைச்சர், இராணுவத்தை வைத்துக்கொண்டும் பக்கச்சார்பான சட்டங்களை வைத்துக்கொண்டும், தமிழ் மக்களை அடிமைப்படுத்திக் கொண்டும், தமது அரசியல் நீரோட்டத்தினுள் சேருமாறு சிங்கள அரசியல் தலைவர்கள் கோரினார்களேயாகில், அது சமத்துவ அடிப்படையிலான கோரிக்கை அல்லவென்றும் விளக்கினார்.    

Related posts