தாயகக் கலைஞன் வர்ண ராமேஸ்வரனின் மறைவுக்குகாரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் ஜெயசிறில் அனுதாப அஞ்சலி

தொண்ணுறுகளில் யாழ்ப்பாணத்தில் கர்நாடக சங்கீதத்தில்  தமக்கென ஒரு முத்திரையைப் பதித்திருந்த மூவர் பொன்  சுந்தரலிங்கம் போல் திலகநாயகம்  மற்றும் வர்ணகுலசிங்கம். வர்ண. ராமேஸ்வரனை அடையாளப் படுத்திக் காட்டியது தாயகப் பாடல்களே. அதிலும் குறிப்பாக உணர்ச்சி பெருக்கெடுத்துப் பாயும் பாடல்கள் அவை. அவரது மறைவு தமிழினத்திற்கு பேரிழப்பாகும் .
 
இவ்வாறு தாயகக் கலைஞன் வர்ண ராமேஸ்வரனின் மறைவுக்கு
காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் ஜெயசிறில் வெளியிட்ட அனுதாப அஞ்சலிக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
 
அவரது அஞ்சலிக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
 
இந்தமூவரில்  பொன் சுந்தரலிங்கம் எண்ணிலடங்காத தாயகப் பாடல்களையும் பக்திப் பாடல்களையும் பாடியுள்ளார். அதிலும் அவர் பூபாளம் ராகத்தில் பாடும் பாடல்கள் வேறு ரகம்..
 இந்த வகையில் வர்ண ராமேஸ்வரன் இன்னொரு ரகம்… அந்தக் காலகட்டத்தில் நல்லூர் திருவிழாக் காலங்களில் இவரது கச்சேரியை அனேகமாக நல்லை ஆதீனம் கம்பன் கழக கச்சேரிகளில் பெரும்பாலும் பார்க்கலாம்.இருந்தாலும் வர்ண ராமேஸ்வரனை அடையாளப் படுத்திக் காட்டியது தாயகப் பாடல்களே…
 
கடல் கடந்து இசைக்கொரு பரிணாமமாக விளங்கிய வர்ண இராமேஸ்வரன் அவர்களின் இசையில் மயங்கிய கொறோனாவின் பிடியில் சிக்குண்டு காலமானார் என்ற செய்தி கேட்டு இசையுலகே வேதனையில் மூழ்கியிருக்கிறது.
 
யாழ்ப்பாணம்இ அளவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவர் இராமேஸ்வரன். தந்தையார் கலாபூசணம் சங்கீதரத்தினம் முருகேசு வர்ணகுலசிங்கம் ஒரு சிறந்த இசைப் பாரம்பரியத்திலே தோன்றியவர். இவரது தந்தை வழிப்பேரனார், தாய் வழிப்பேரனாரும் இசை நாடகக் கலைஞர்கள். ஆரம்பக் கல்வியை அளவெட்டி சீனன்கோட்டை ஞானோதய வித்தியாசாலையிலும், பின்னர் உயர் கல்வியை தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியிலும் கற்றார்.
 
இராமேசுவரன் பண்ணிசை மூலமும், பின்னர் மிருதங்கம் வாசிப்பது மற்றும் ஆர்மோனியம் வாசிப்பதன் மூலமும் தந்தையின் பயிற்சியில் கருநாடக இசையைக் கற்றார். யாழ் பல்கலைக்கழகத்தின் இராமநாதன் நுண்கலைப் பிரிவில் மாணவனாக இணைந்து கொண்டார். அதன் வாயிலாக நான்கு ஆண்டுகள் “இசைக்கலைமணி” என்னும் பல்கலைக்கழகப் பட்டத்தைப் பெற்று, அங்கேயே தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக இசை விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.
 
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகின்றோம்.
அன்னாரின் பிரிவால் துடி துடித்துப் போயிருக்கும் குடும்பத்தினருக்கும் மற்றும் உறவுகளுக்கும் என் போன்ற இசையால் இணைந்த இசைக் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்களையும்
தெரிவிக்கின்றோம்.

Related posts