தூக்கிலிடுவது தொடர்பாக ஜனாதிபதியின் உத்தரவு கிடைக்கவில்லை: நீதி அமைச்சு

மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு போதைப்பொருள் குற்றவாளிகளைத் தூக்கிலிடுவது தொடர்பான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவு, இன்னமும் நீதி அமைச்சுக்கு அனுப்பப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நான்கு குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் ஆணையில் தான் கைச்சாத்திட்டுள்ளதாகவும், அதற்கிணங்க விரைவில் நால்வருக்கு முதற்கட்டமாக மரண தண்டனை விதிக்கப்படும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

இவரது இந்த கருத்தானது சமகால அரசியலில் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எனினும், மரண தண்டனையை நிறைவேற்றுவது குறித்து, ஜனாதிபதி கைச்சாத்திட்ட ஆணை எதுவும், நீதியமைச்சுக்கு இன்னமும் கிடைக்கவில்லை என்று நீதியமைச்சின் செயலாளர் மீகஸ்முல்ல தெரிவித்துள்ளார்.

அத்துடன், தூக்குத் தண்டனையை நிறைவேற்றுபவர் பணிக்கு விண்ணப்பித்தவர்களின் பட்டியலில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரு தொகுதியினருக்கு தற்போது பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், தூக்குத்தண்டனையை நிறைவேற்றும் அலுகோசு பதவிக்கு இன்னமும் எவரும் தெரிவு செய்யப்படவில்லை என்றும் மீகஸ்முல்ல உறுதிப்படுத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts