நாடு முழுவதும் 60-70 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று

 

நாடு முழுவதும் 60-70 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக வடக்கு, வடமத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம், கம்பஹா மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மத்திய மலைநாட்டிலும் இவ்வாறு பலத்த காற்று வீசுமென அத்திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளது.

மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என அத்திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

அனுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அந்த திணைக்களம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

இதேவேளை, சூரியனின் தென்திசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக ஓகஸ்ட் மாதம் 27ஆம் திகதியிலிருந்து செப்டம்பர் 07ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.

அதற்கமைய இன்று முசலிப்பிட்டி, புளியங்குளம், தம்புத்தேகம, பெரியகுளம் மற்றும் மெதிரிகிரிய ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.11 அளவில் சூரியன் உச்சம் கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts