மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 04 ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுன கட்சி தேர்தலின் பின்னர் ஆட்சி அமைக்கக் கூடிய சூழல் இருந்தால் புதிய அரசியல் யாப்பு விடயத்தில் எங்களது வேண்டுகோளை ஏற்றுக் கொள்வார்களாக இருந்தால் அவர்களது அரசாங்கத்திற்கு கூட நாங்கள் ஆதரவினை தெரிவிக்கக் கூடிய சூழல் உருவாகும் என்று முன்னாள் பாராளுமன்ற உருப்பினரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற வேட்பாளருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.

 

தற்கால அரசியல் நிலவரம் தொடர்பாக வாழைச்சேனை அரசியல் பணிமணையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

 அங்கு அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்.

 பொதுவாக கடந்தகால அரசாங்கத்தில் நாங்கள் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்திற்கு ஆதரவினை கொடுத்திருந்தோம் எங்களைப் பொறுத்தவரை ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கமோ அல்லது பொதுஜன பெரமுன அரசாங்கமோ அல்லது ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி அரசாங்கமோ அல்லது சஜித் பிரேமதாசா அரசாங்கமோ எதுவாக இருந்தாலும் சிங்கள பேரினவாத அரசாங்கம் தான் இவர்களில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை யார் தீர்ப்பதில் எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கின்றார்களோ அவர்களோடு எப்போதும் பேசுவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம்.

 அந்த வகையிலே மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுன கட்சி தேர்தலின் பின்னர் அவர்கள் ஆட்சி அமைக்கக் கூடிய சூழல் இருந்தால் அதே நேரத்தில் தமிழ் மக்களின் அபிலாசைகளை தீர்க்கின்ற புதிய அரசியல் யாப்பு விடயத்தில் கூடிய அக்கறையை காட்டுகின்ற செயற்பாட்டிற்கு முன்வந்து எங்களது வேண்டுகோளை ஏற்று எங்களோடு பேசி எங்களுக்கு பூரண ஒத்துழைப்பை தர முன்வருவார்களாக இருந்தால் அவர்களது அரசாங்கத்திற்கு கூட நாங்கள் ஆதரவினை தெரிவிக்க் கூடிய சூழல் உருவாகும்.

 மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்கத்தினால் வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளது என்ற தோரனையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் இளைஞர்கள் மத்தியில் கூறி அவரது அலுவலகத்திற்கு அழைக்கின்ற நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றார். இது ஒரு பிழையான நடவடிக்கை தேர்தல் அதிகாரிகள் இவ்விடயத்தில் கரிசனை காட்ட வேண்டும் ஜனநாய ரீதியில் நடைபெறுகின்ற தேர்தலை பிழையான முறையில் நடாத்துவதற்கு முயற்சிக்கக் கூடாது பிழையான கருத்துக்களை இளைஞர்கள் மத்தியில் வைத்து வாழைச்சேனை தேசிய கடதாசி ஆலையில் வேலை வாய்ப்பினை தருவோம் என்று கூறி விண்ணப்பப் படிவம் வழங்கும் ஏமாற்று நடவடிக்கையினை உடன் தடுத்து நிறுத்துமாறு அதிகாரிகளை கேட்டுக் கொள்கிறேன்.

 மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை பொறுத்தவரை பல அரசியல் கட்சிகளும் சுயேற்சை குழுக்களுமாக களம் இறங்கியுள்ளது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பைத் தான் பெரும்பாலும் ஆதரித்து வருகின்றார்கள். ஆனால் இம்முறை பல போட்டிகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. பல தமிழ் கட்சிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வாக்கு பலத்தினை உடைக்க வேண்டும் என்றவகையில் அரசாங்கத்தினால் அனுப்பப்பட்டு இருக்கின்றது. கடந்த காலங்களிலும் தமிழ் சிங்கள முஸ்லீம்களை இணைத்திருந்த கட்சிகள் கூட தமிழ் தேசிய கூட்டமைப்பை உடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசாங்கத்தின் ஆலோசனையைப் பெற்று அதன் நிமித்தம் மட்டக்களப்பு மாவட்டத்தில் தனி தமிழ் வேட்பாளர்களை மாத்திரம் கொண்டு களம் இறக்கியுள்ளார்கள்.

 தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் நியாயமான அரசியல் தீர்வை பெற்றுக் கொடுப்பதிலும் எதிர்கால அபிவிருத்தியை அவர்களுக்கு உருவாக்குவதிலும் மக்களின் அபிலாசைகளை பெற்றுக் கொடுப்பதிலும் பூரணமாக செயற்படும் வண்ணம் தங்களது பிரச்சாரத்தினை முன்னெடுத்துள்ளது அதனை நிவர்த்தி செய்வதில் தேர்தலின் பின்னரும் செயற்படும்.

 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் நியாயமான அரசியற் தீர்வீனைப் பெற்றுக் கொடுப்பதிலும், எதிர்கால அபிவிருத்தியை அவர்களுக்கு உருவாக்குவதிலும், மக்களின் அபிலாசைகளைத் தீர்ப்பதிலும் பூரணமாகச் செயற்படுகின்றது. ஒரு வகையில் மக்களுக்கு அபிவிருத்தி தேவையானதாக இருக்கின்றது. ஆனால் அபிவிருத்திக்காக மாத்திரம் எம்மவர்கள் தியாகங்களை மேற்கொள்ளவில்லை. தமிழ் மக்களின் நீண்ட கால அபிலாசையான அரசியல் உரிமை கிடைக்கப்பெற வேண்டும்.

 தற்போது இந்த நாட்டின் அரசாங்கம், அரச தலைவர் இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டுதான் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அண்மையில் கிழக்கு மாகாணத்திற்கு தொல்பொருள் என்ற வகையில் இராணுவத்தினரையும். பௌத்த மத குருமாரையும் நூறு வீதம் சிங்களவர்களை மாத்திரம் கொண்டதான ஜனாதிபதி செயலணியை அமைத்து தமிழர்களின் வாழிடங்களை தொல்பொருள் என்ற அடிப்படயில் சுவீகரிப்பதற்கு இந்த அரசும் ஜனாதிபதியும் துரிதமாகச் செயற்பட்டு வருகின்றனர்.

 இந்நிலையில் இவ்வாறான செயற்பாடுகளைத் தடுப்பது, அரசாங்கத்தின் இராணுவ மயமாக்கலைத் தடுப்பது, வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் வாழிடங்களைச் சுவீகரிப்பதற்காக மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து நடவடிக்கைகளையும் தடுத்து நிறுத்தக் கூடிய வல்லமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத் தான் இருக்கிறது. ஏனெனில் தமிழ் மக்களின் கட்சி என்ற ரீதியில் களமிறங்கியிருக்கின்ற கட்சிகள் எல்லாம் அசாங்கத்தின் பின்னணியில் செயற்படுகின்றனவை. இவை அரசுக்கு எதிராகக் கருத்து வெளியிட முடியாது. தங்களது பதவிகளைப் பாதுகாப்பதற்காக அரசாங்கத்திற்கு எப்போதும் முட்டுக் கொடுத்துக் கொண்டு தான் இருப்பார்கள். அவர்களால் தமிழ் மக்களுக்கு விரோதமாக உருவாக்கப்படுகின்ற அரசின் செயற்திட்டங்களை முறியடிக்க முடியாது. அதனை முறியடிக்கக் கூடிய அத்தனை வல்லமையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத் தான் இருக்கின்றது.

 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன் கருத்தினை நியாயமாக மக்கள் முன் வைக்க இருக்கின்றது. அந்த வகையிலே தமிழ் மக்களும் தற்போதைய அரசின், ஜனாதிபதியின் நடவடிக்கைகளை நன்றாக உணர்ந்திருக்கின்ற காரணத்தினால் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 04 ஆசனங்களைப் பெற்றுக் கொடுக்கின்ற முயற்சியில் தங்கள் ஆதரவினை வழங்குவார்கள்.

 அரசாங்கத்திற்கு வலது பக்கமும் இடது பக்கமும் இருக்கின்ற கட்சிகள் தமிழர்கள் என்ற போர்வையில் மக்களிடம் ஆணை கேட்கின்றார்கள். இவர்களால் தேசிய கீதத்தை பாடுவதற்கு குரல் கொடுக்க முடியவில்லை. திட்டமிட்ட தமிழ் மககளின் வாழிடங்களைச் சுவீகரிக்கும் நோக்கோடு அமைக்கப்பட்டுள்ள நூறு வீதம் சிங்களவர்களைக் கொண்ட இராணுவம், பௌத்த மதகுருக்களைக் கொண்ட தொல்பொருள் திணைக்கள ஜனாதிபதி செயலணியைத் தடுக்க முடியவில்லை. ஏன் தமிழ் மக்களுக்கு எதிராக அரசு எடுக்கின்ற எந்த நடவடிக்கைக்கும் எதிராக அவர்கள் கருத்துச் சொல்லவும் முடியாது. ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பினை இந்த அரசாங்கத்தால் அடக்க முடியாது. ஏனெனில் தமிழ் மக்களுக்காக நீண்ட காலமாக பாராளுமன்றத்திற்கு உள்ளும், வெளியிலும், சர்வதேசத்திலும் குரல் கொடுக்கின்ற ஒரே ஒரு பலமான தமிழ் மக்களின் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தான்.

 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்குகளை இயன்றவரையில் சுவீகரிப்பதற்கும், ஆசனங்களைக் குறைப்பதற்குமான முயற்சிகளை எமக்கு எதிராகச் செயற்படுகின்ற அரசாங்கத்தின் பின்னணியில் உள்ள கட்சிகள் மேற்கொள்ளும். அது அவர்களுக்குத் தோல்வியாகவே அமையும். அவர்களால் தமிழ் மக்களுக்குப் பாதகமே தவிர தமிழ் மக்களுக்கு எவ்வித உயர்வும் ஏற்படாது.

 தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் தற்போது வாழைச்சேனை தேசிய கடதாசி ஆலையை ஆரம்பித்ததாகக் கூறிக்கொண்டு, அதற்கு வேலை வாய்ப்பு வழங்கப் போகின்றோம் என்று பொதுஜன பெரமுனவின் வேட்பாளர்கள் விண்ணப்பங்கள் வழங்கி இளைஞர்களை ஏமாற்றும் படலத்தை ஆரம்பித்திருக்கின்றார்கள். இந்தத் காகித ஆலையைக் கொண்டு வருவதில் அயராது உழைத்தவர்கள் நாம். முன்பிருந்த ரணில் அரசு ஐரி பார்க் என்ற வகையில் இதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்திருந்தது. பல தடவை அந்த அரசுடன் வாதாடி அந்த கடதாசிக் கம்பனியை இயங்கச் செய்தவர்கள் நாம்.

 அரசாங்கம் மாறியதும், புதிய ஜனாதிபதி வந்தமையால் அவர்கள் பொறுப்பேற்றிருக்கின்றார்கள். ஆனாலும் தேர்தலுக்குப் பின் எந்த அரசு ஆளும் என்பதை யாரும் கூற முடியாது. எந்த அரசும் ஆட்சி அமைக்க வேண்டுமாக இருந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு தேவை என்ற சூழல் உருவாக இருக்கின்றது. அவ்வாறான நிலையில் கடதாசிக் கம்பனியில் வேலை வாய்ப்புகளைக் கொடுப்பதாக இருந்தாலும் அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனுசரணை மூலம் தான் நடைபெறும்.

 எனவே இப்போது பொதுஜன பெரமுன வேட்பாளர்களின் கருத்துக்களை கேட்டு தேர்தல் காலங்களில் சட்டத்திற்கு முரணான வகையில் மேற்கொள்ளப்படுகின்ற பிழையான நடவடிக்கைக்கு இளைஞர்கள் ஆளாகக் கூடாது. இது ஒரு ஏமாற்ற வித்தை தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்பதற்கான ஒரு உத்தி இதனை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும். படித்தவாகள், அனுபவசாலிகள், இளம் சமூகத்தினர் பலவற்றைத் தெரிந்தவர்கள் அரசில் பற்றியும் பலவாறு அறிந்தவர்கள். தேர்தலொன்று வந்தால் அரசாங்கக் கட்சியில் இருப்பவர்கள் இவ்வாறான பித்தலாட்டச் செயல்களைச் செய்வது வழமை. இதனை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

Related posts